சத்யா சாய்பாபா 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தை பெயர் ராஜு ரத்னாகரம், தாயார் பெயர் ஈஸ்வரம்மா.

சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். அப்போது வானில் இருந்து வந்த அதிசய ஒளி ஈஸ்வரம்மா வயிற்றில் புகுந்தது போன்று இருந்தது. அதன் பிறகு ஈஸ்வரம்மா கர்ப்பம் ஆனார்.

குறிப்பிட்ட காலம் கடந்ததும் அவருக்கு குழந்தை பிறந்தது. சத்ய நாராயண ராஜு என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்கள். சிறு பருவத்திலேய சாய்பாபா எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல், என தொட்ட துறைகளில் எல்லாம் பிரகாசமாக இருந் தார்.

1940-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி சாய்பாபா தனது சகோதரருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரை தேள் கொட்டி விட்டது. இதனால் அவர் சில மணி நேரம் தன்னிலை மறந்தவராக மாறிவிட்டார். அதன் பிறகு சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது என முற்றிலும் மாறுபட்ட நபராக தோன்றினார்.

இதனால் பயந்துபோன பெற்றோர்கள் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் சாய்பாபாவை பரிசோதித்து விட்டு நரம்பு தளர்ச்சி நோய் தாக்கி இருப்பதாக கூறினார்கள். அதற்கு சிகிச்சை அளித்தும் எந்த மாற்றமும் இல்லை. மத குருக்கள், சாமியார்களிடம் அழைத்து சென்றனர். பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 1940-ம் ஆண்டு மே 23-ந் தேதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

ஆனால் தந்தை ராஜு ரத்னகரம் கோபம் அடைந்து “ஏன் இப்படி மாய மந்திர வேலை செய்கிறாய்” என்று கூறி திட்டினார். அதற்கு சாய்பாபா நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார்.

சத்ய சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்புதான் சீரடி சாய்பாபா இறந்திருந்தார். இந்த நிலையில் சத்யசாய்பாபா நான் தான் சீரடி சாய்பாபாவின் மறுபிறவி என்று அவர் கூறியதால் அனைவரும் வியப்படைந்தனர்.

இந்த தகவல் சுற்று வட்டார பகுதி முழுவதும் பரவியது. அதுவரை சத்ய நாராயணராஜுவாக இருந்த அவர் சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார். மக்கள் திரண்டு வந்து சாய்பாபாவை பார்த்தனர். அவர்களுக்கு சாய்பாபா அருளாசி வழங்கினார். பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி காட்டினார்.

அதன் பிறகு சாய்பாபாவே சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்றார். அவரை காண வந்த பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறின. தனது கை,கால்களில் இருந்தும் உடல்களில் இருந்தும் திடீரென பல்வேறு பொருட்களை எடுத்து காட்டி எல்லோரையும் அதிசயிக்க வைத்தார்.

இதனால் அவரது புகழ் தென்இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. 1944-ம் ஆண்டு பக்தர்கள் அனைவரும் சேர்ந்து சாய்பாபாவுக்கு புட்டபர்த்தியில் கோயில் கட்டி கொடுத்தனர். அங்கு பக்தர்கள் குவிய தொடங்கினார்கள்.

இதனால் விரிவான கோவில் கட்டப்பட்டது. அதற்கு பிரசாந்தி நிலையம் என்று பெயர் சூட்டினார்கள். 100 ஏக்கர் நிலம் கோவிலுக்காக வாங்கப்பட்டது. 1948-ல் அங்கு சாய்பாபா ஆசிரமத்தை கட்டினார். 1954-ல் சிறு ஆஸ்பத்திரி ஒன்றை கட்டி இலவச மருத்துவ சிகிச்சை வழங்கினார்.

அவருடைய அருளாசி, அதிசயங்களால் கவரப்பட்டு இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் சாய் பாபாவுக்கு பக்தர்கள் உருவானார்கள். இந்தியா முழுவதும் சாய்பாபா சுற்றுப்பயணம் செய்தார். தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தார். அவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் கருதினார்கள்.

இந்தியா முழுவதும் சத்ய சாய்பாபா ஆசிரமங்கள் உருவாயின. 137 நாடுகளில் அவருக்கு பக்தர்கள் உருவானார்கள். பக்தர்கள் ஏராளமான பணத்தை ஆசிரமத்தில் கொட்டினார்கள். இவற்றை பொது மக்களின் நல்ல காரியங்களுக்காக செலவிட்டார்.

குடிநீர், சுகாதாரம் போன்ற பணிகளுக்காக அதிக அளவில் செலவிட்டார். தற்போது உலகில் 114 நாடுகளில் 1200 இடங்களில் சத்ய சாய்பாபா மையங்கள் உள்ளன. சாய்பாபா ஆசிரமத்தின் சொத்து மதிப்பு ரூ.2 1/2 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது.

சத்ய சாய் பாபா(85) இன்று மரணம் அடைந்தார். 28 நாட்களாக தீவிர சிகிசை அளித்தும் பலனளிக்காமல் இன்று(.24. 4.2011 )மறைந்தார்.