இந்தோனேஷியாவின் பபுவா தீவுப் பகுதியில் பேசப்பட்டு வரும் ‚டஸ்னர்‘ எனப்படும் அழிவின் விளிம்பிலுள்ள மொழியொன்றினை பதிவு செய்து காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

குறித்த மொழியானது தற்போது வெறும் 3 பேரால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றது.

இவர்கள் 60 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமாவர். கடந்த வருடமே ‚டஸ்னர்‘ மொழி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் உள்ள மீன் பிடிக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரே இம் மொழியை அறிந்தவர்களாவர். இதுவும் விசேட வைபங்களின் போதே உபயோகிக்கப்படுகின்றது.

‚டஸ்னர்‘ மொழி அழிந்து போகும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருப்பதனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அம்மொழியை பதிவுசெய்வதற்காக இப்பகுதிக்கு தற்போது விரைந்துள்ளனர்.

இம்மொழியைப் பேசி வந்த சிலர் அங்கு அடிக்கடி இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பாதுகாப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தோனேஷியாவில் ‚மலாய்‘ மொழியின் பாவனை அதிகரித்ததைத் தொடர்ந்து அம்மொழிப் பாவனையாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‚டஸ்னர்‘ இனை கற்பிப்பதை நிறுத்தி விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இம் மொழியின் அழிவுக்கு இதுவும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

உலகின் 6000 மொழிகளில் 50 வீதமானவை இந்நூற்றாண்டில் மறைந்து போகுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.