அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நடத்திய „விண்வெளி குடியேற்ற ஆய்வுக் கட்டுரைப் போட்டிகள்-2011″ல் இந்திய மாணவர்கள் 4 பேர் முதல் பரிசு பெற்றுள்ளனர்.
தில்லி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த சித்தார்த்த திரிபாதி, அக்ஷாத் தத், நிசார்க் பெஹ்ரா, மிருணாள் சௌத்ரி ஆகியோர் பரிசை தட்டிச் சென்றுள்ளனர். இவர்களில் மிருணாள் சௌத்திரி மட்டும் 8ம் வகுப்பு மாணவர். மற்ற அனைவரும் 12ம் வகுப்பு மாணவர்கள்.

இதில் „சங்க்ரிலா“ என்ற தலைப்பில் தங்களது ஆய்வுக் கட்டுரையை சித்தார்த், அக்ஷாத், நிசார்க் ஆகிய மூவரும் இணைந்து சமர்ப்பித்தனர். இவர்களுக்கு 9 -12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.

இவர்கள் தங்களது கட்டுரையில் சுமார் 20 ஆயிரம் பேர் விண்வெளியில் நிரந்தரமாக தங்குவதற்கான வழிமுறைகள், அதற்கான ஏற்பாடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தனர். விண்வெளியில் தொழில் நிறுவனங்கள், அரசு இயந்திர செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு, உயிரி மறு சுழற்சி முறை, பணப்பரிமாற்ற முறை போன்றவை பற்றி அவர்கள் தங்களது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும் பூமியில் அல்லாத வேறு பல வசதிகளுடன் விண்வளியில் சொகுசு வாழ்க்கை வாழ்வது பற்றியும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். 8ம் வகுப்பு மாணவி மிருணாள் சௌத்ரிக்கு ஓவியப் பிரிவில் முதல் பரிசு கிடைத்துள்ளது. விண்வெளியில் குடியிருப்புகள், பொழுபோக்கு நிலையங்கள், ஆய்வகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், உணவு, உடை, சுற்றுச் சூழல் குறித்த அம்சங்கள், கழிவுகள் மேலாண்மை போன்றவை குறித்து தெளிவாகவும் திறம்படவும் விளக்கும் வகையில் படங்கள் வரைந்திருந்தார்.

மே மாதம் 18ம் திகதி முதல் 28ம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச விண்வெளி மேம்பாட்டு கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு இந்த 4 மாணவர்களுக்கும், அவர்களை வழி நடத்திய பள்ளியின் அறிவியல் ஆசிரியர் பிஜய் பகதூர் மாத்தூருக்கும் நாசா அழைப்பு விடுத்திருப்பதாக பள்ளி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.