சுன்னாகத்தில் 10 வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயன்ற நபர் ஒருவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சுன்னாகம் நாகேஸ்வரி பாடசாலையைச் சேர்ந்த குறித்த 10 வயதுச் சிறுமியை அந்தப் பகுதியில் பீடா விற்பனை செய்பவர் ஒருவரே பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்றுக் காலை 6.30 மணிக்கு பாடசாலை மேலதிக வகுப்பிற்கென தனியாகச் சென்ற குறித்த சிறுமியை மேற்படி நபர் முச்சக்கரவண்டியில் வந்து வழிமறித்துள்ளார். பின்னர் சிறுமியைத் தானே முச்சக்கர வண்டியில் பாடசாலைக்குக் கொண்டு சென்று விடுவதாகக் குறித்த நபர் கூற, சிறுமியும் அதனை நம்பி அந்த முச்சக்கர வண்டியில் அவருடன் சென்றுள்ளார்.
முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சிறுமியை சுன்னாகம் ஐயனார் கோயிலடியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்து விட்டு பின்னர் அந்த இடத்திலேயே கைவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் குறித்த சிறுமி பாடசாலைக்கு நேரம் தாழ்த்தி சென்றுள்ளார். பாடசாலை அதிபர் சிறுமி நேரம் தாழ்த்தி வந்தமைக்கான காரணத்தைக் கேட்ட போதே சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் அந்தப் பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அந்தப் பகுதி சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமசேவையாளர் ஆகியோர் இணைந்து சிறுமி சொன்ன அடையாளத்தைக் கொண்டு குறித்த நபரைத் தேடியுள்ளனர்.
நேற்று மாலை 5 மணியளவிலேயே குறித்த நபர் பொதுமக்களிடம் அகப்பட்டுள்ளார். இதன்போது பொதுமக்கள் குறித்த நபரை கடுமையாகத் தாக்கியதுடன், சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சுன்னாகம் சந்திக்கு அருகில் இவர்கள் சென்ற போது சுன்னாகம் பொலிஸார் ஓடி வந்து இளைஞர்களை தாக்கியதாக இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் சிவில் உடையில் நின்ற பொலிசார் சிலர் தமது செருப்பினை கழற்றி இளைஞர்களை அடித்ததாகவும் கூறப்படுகின்றது. இதே வேளை பொலிஸ் நிலையத்துக்குள் மக்கள் கொந்தளிப்புடன் நுழைந்ததைத் தொடர்ந்தே அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் மீது கடுமையுடன் நடந்து கொண்டதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தகே நபர் சுன்னாகம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த நபரின் தேசிய அடையாள அட்டையில் வவுனியா நெடுங்குளத்தைச் சேர்ந்த கௌசிகன் (வயது 36) என்று காணப்படுகின்றது. இருப்பினும் தற்போது குறித்த நபர் கோண்டாவிலில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.














விசக்கிருமி