ஜலகண்டபுரத்தில் இச்சி மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கட்டட தொழிலாளியின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மரண போராட்டத்திலும் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ செய்தது.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் முதலாவது வார்டு முனியப்பன் கோவில் அருகில் கட்டட தொழிலாளி கோவிந்தராஜ், சண்முகம், பெரியமணி ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான ஓட்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அருகில் பெரிய இச்சி மரம் இருந்தது. கோவிந்தராஜ் கட்டட வேலைக்காக திருச்செங்கோடு சென்றுவிட்டார். வீட்டில் கோவிந்தராஜ் மனைவி மீனாட்சி (35), மகள்கள் கலைவாணி (7), தீபிகா (5) மட்டுமே இருந்தனர்.

நேற்று முன்தினம் தீபிகா தூங்குவதற்காக அருகிலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வீட்டில் மீனாட்சியும், அவரது மகள் கலைவாணியும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் ஜலகண்டபுரத்தில் வீசிய சூறைகாற்றில் இச்சி மரம் வேரோடு பெயர்ந்து அருகிலுள்ள மூன்று வீடுகளின் மேல் சாய்ந்தது. இதில் கிளைகளுக்கு நடுவில் மாட்டி கொண்ட மீனாட்சியால் வெளியேற முடியவில்லை. அருகில் மகள் கலைவாணி தூங்கி கொண்டிருந்தாள்.

மரக்கிளை சிறிது, சிறிதாக கீழே இறங்கியுள்ளது. சிறிது நேரத்தில் மகளையும் மரக்கிளை நசுக்கி விடும் என்பதை உணர்ந்த மீனாட்சி தப்பிக்க முடியாத நிலையில் அருகில் தூங்கி கொண்டிருந்த மகள் கலைவாணியை தூக்கி வீட்டுக்கு வெளியே வீசியுள்ளார். வெளியில் தூக்கி வீசப்பட்ட சிறுமி கலைவாணி லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். மரக்கிளையின் அடியில் சிக்கி கொண்ட மீனாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வீடுகளில் தூங்கியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இச்சி மரம் சாய்ந்ததால் அருகிலுள்ள மின்கம்பமும் முறிந்து தொங்கியது. மரண போராட்டத்திலும் தனது மகளை வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய மீனாட்சியின் தாய் பாசம் அப்பகுதி மக்களை நெகிழ செய்தது. ஜலகண்டபுரம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.