இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது வேலூர் மாவட்டம். வேலூர் என்றவுடன் உங்களுக்கு உடனே வேலூர் கோட்டை நினைவுக்கு வர கூடும். அல்லது சி. எம். சி மருத்துவ மனை நினைவுக்கு வரலாம். இல்லையென்றால் ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்படுகின்ற ஏலகிரி நினைவுக்கு வரலாம். ஆனால் வேலூருக்கு தற்போது கிடைக்கப் பெற்று இருக்கின்ற தனித்துவ அடையாளம்தான் ஸ்ரீபுரத்தில் உள்ள பொற்கோவில்.

இது இலக்குமிக்கான கோவில். சில வருடங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது என்றாலும் குறுகிய காலத்துக்குள் நிறையவே பிரபலம் பெற்று விட்டது. பொற்கோவில் என்றால் பஞ்சாபியில் உள்ள அமிர்தசரஸ்தான் என்கிற நிலை மாறி தமிழ்நாட்டிலும் ஒரு பொற்கோவில் உள்ளது என சொல்ல வைத்து இருக்கின்றது.

வேலூரில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்கிற இடத்தில் 1000 ஏக்கர் நிலப் பரப்பில் 55000 சதுர அடியில் கோவில் அமையப் பெற்று உள்ளது. இக்கோவிலை அமைக்க திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 400 பொற்கொல்லர்கள் மற்றும் செப்பு வேலை செய்பவர்கள் ஆறு வருடங்கள் அயராது உழைத்தனர். இந்திய ரூபாய் 600 கோடி செலவில் கோவில் எழுந்து உள்ளது. கோவில் சுவர்களில் செப்புத் தகடுகள் அடிக்கப்பட்டு பின் தங்கத் தகடுகள் 09 அடுக்குகளாக வேயப்பட்டு இருக்கின்றன.

ஸ்ரீ சக்தி அம்மா என்கிற அவதார மூர்த்தியின் சக்தியால்தான் இவ்வாலயம் அமையப் பெற்று இருக்கின்றது என அடியவர்கள் நம்புகின்றனர். நாராயணியாக பூலோகத்தில் அவதரித்து இருக்கின்றார் என்று ஸ்ரீ சக்தி அம்மா 1992 ஆம் ஆண்டு மே 08 ஆம் திகதி பிரகடனப்படுத்தினார். பொற்கோவிலின் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை வாசகர்களின் பார்வைக்கு தருகின்றோம்.