என்னை தெரியுமா.. ? நீங்க தானே நம்பர் கொடுத்தீங்க… உங்கட வொய்ஸ் அழகா இருக்கு… எப்படி இருக்கீங்க.. ஏன் கோபப் படுறீங்க.. – இவை இரவு நேரங்களில் இனந்தெரியாத நபர்களிடம் இருந்து பெண்களுக்கு வரும் முறைகேடான தொலைபேசி அழைப்புக்கள்.

ஆம். தற்போது சில பகுதிகளில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இந்த இனந்தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள்.

நமது தொலைபேசி இலக்கம் இவர்களுக்கு எப்டி தெரியும்? யார் இலக்கத்தை கொடுத்தார்கள்? யாராவது நம்மைக் குழப்புகிறார்களோ என இந்த முறையற்ற அழைப்புகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு பதில் புரியாத புதிராகவே இருந்து வந்துள்ளது.

ஆனால் இந்த புதிருக்கு கிடைத்த பதில் அதிர்ச்சியானதும் ஆச்சரியத்துக்குரியதாகும். அதாவது முறையற்ற அழைப்புகள் நண்பர்களிடமிருந்தோ, உறவினர்களிடமிருந்தோ வரவில்லை. அவை அனைத்தும் தொடர்பாடல் நிலையங்களிருந்தே (Tele Communications) வந்துள்ளன. அதுவும் இரவு நேரங்களில்.

அதாவது இன்றைய கணனியுகத்தில் தொடர்பாடலுக்கு முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது கையடக்கத் தொலைபேசி. சிறுவர், முதியவர் என எவர் கையை பார்த்தாலும் இந்த யைடக்க தொலைபேசிகள் உலாவருகின்றன.

ஆனால் இதனை தவறான வழிகளில் பயன்படுத்துகின்றமை வருந்தக்க விடயமாகும். அதாவது கையடக்க தொலைபேசிகளுக்கு ரீலோட் செய்வதற்காக அனைவரும் தொடர்பாடல் நிலையங்களுக்கு செல்வது வழமை.

பெண்களில் சிலர் நண்பர்களிடமோ அல்லது உறிவினர்களிடமோ தனது கையடக்க தொலைபேசி இலக்கத்தை கொடுக்க விரும்புவதில்லை. ஆனால் இவற்றுக்கு அப்பால் யாரென்றே தெரியாத தொடர்பாடல் நிலையங்களில் இருக்கும் நபர்களிடம் ரீலோட் செய்வதற்காக தமது இலக்கங்களைக் கொடுத்துவிட்டு வந்து விடுகின்றனர்.

கொடுத்த பணத்திற்கு சில நிமிடங்களில் ரீலோட் வந்து விட்டாலே போதும் நினைத்து விடுவார்கள். அதற்கு பிறகு ரீலோட் கடைக்காரரிடம் இலக்கத்தை கொடுத்தோமே, அதனை ஏதும் தவறான முறையில் பயன்படுத்தி விடுவாரோ என கடுகளவேனும் சிந்திப்பதில்லை.

ஆனால் சமூகத்தில் இன்று சிந்திக்க வைக்க கூடிய பிரச்சனையாக இந்த முறையற்ற அழைப்புகள் காணப்படுகின்றன.

அண்மைக்காலமாக சில தொடர்பாடல் நிலையங்களிலிருந்து இந்த பிரச்சினைகள் ஊற்றெடுத்துள்ளன.

அதாவது தொடர்பாடல் நிலையங்களில் தொழில் புரிபவர்கள் பகல் நேரங்களில் தனது கடைகளுக்கு ரீலோட் செய்ய வரும் பெண்கள் சிலரின் கையடக்க தொலைபேசி இலக்கங்களை குறித்து வைத்துக்கொள்கின்றனர்.

இதன்பின்னர் இரவு நேரங்களில் குறித்த இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்து அநாகரிமான முறையில் வார்த்தை பிரயோகங்களை உபயோகிப்பதோடு அச்சுறுத்தல்களையும் விடுகின்றனர்.

இது குறித்து அவதானமாக இருப்பது நல்லது.