வால்வெள்ளி (Comet) சிறுகோளை ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. „dirty snowballs,“ என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டு, மெத்தேன் மற்றும் நீர் என்பவற்றுடன் தூசி, கனிம aggregates என்பனவும் கலந்து உருவானவை.சூரிய நெபுலாக்கள் ஒடுங்கும்போது மீந்துபோன கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய நெபுலாக்களின் வெளி விளிம்புகள், நீர், வாயுநிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகப் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாக வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளை பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வர்ணிப்பது சரியல்ல.

ஹேலியின் வால்வெள்ளி

ஹேலியின் வால்வெள்ளி அல்லது ஹேலியின் வால்மீன் (Halley’s Comet), என்பது 75 முதல் 76 ஆண்டுகளுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் ஒரு வால்வெள்ளி ஆகும். இது அதிகாரபூர்வமாக 1P/ஹேலி என அழைக்கப்படுகிறது. பூமியில் தோன்றும் வால்வெள்ளிகளில் இது மிகவும் பிரபல்யமானது. ஒவ்வோரு நூற்றாண்டிலும் வானில் பல வால்வெள்ளிகள் தோன்றி மறைந்தாலும் ஹேலி குறுகிய நேரத்துக்கு தெளிவாகக் சாதாரண கண்களுக்குத் தெரியக்கூடியதாகும். ஹேலியின் வால்வெள்ளி சூரியக் குடும்பத்துக்குள் கடைசித் தடவையாக பெப்ரவரி 9, 1986 இல் வந்து போனது. அடுத்த தடவை இது 2061 இன் நடுப்பகுதியில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.இங்கிலாந்தின் வானியல் ஆய்வாளர் எட்மண்ட் ஹேலி என்பவர் இதனை முதன் முதலில் 1682 இல் கண்டறிந்தார். 1337 முதல் 1698 வரை தோன்றிய வால்மீன்களின் அட்டவணையை ஹேலி தயாரித்தார். 1531 இல் பெட்ரஸ் அப்பியானஸ் என்பவரினால் அவதானிக்கப்பட்ட வால்வெள்ளி, பின்னர் 1607 இல் கெப்லரினால் கண்டறியப்பட்ட வால்வெள்ளி, மற்றும் 1631 இல் தான் கண்டுபிடித்த வால்வெள்ளி மூன்றும் ஒன்றே என ஹேலி கருதினார். 1705 இல் அவர் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் 1682 இல் தோன்றிய வால்மீனே 76 ஆண்டுகளுக்குப் பின் 1758 இல் மீண்டும் தோன்றும் எனக் கூறினார். அதன் படி இவ்வால்வெள்ளி டிசம்பர் 25, 1758 இல் ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் கண்டுபிடிக்கப்பட்டது.ஆண்டோர் எழுபதைந்தினில் ஒரு முறை மண்ணே அணுகும் வால்மீனைத் தினையின் மீது பனை நின்றாங்கு மணிச் சிறு மீன் மிசை வளர்வால் ஒளிவரக் கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகு தூமகேதுச் சுடரே வாரய்! என்று 1910-இல் ஹேலியின் வால்வெள்ளியைப் பாடியிருக்கிறார் மகாகவி பாரதியார்.

ஹேல்-பொப் வால்வெள்ளி

ஹேல்-பொப் வால்வெள்ளி (Comet Hale-Bopp; C/1995 O1) என்பது 20ம் நூற்றாண்டில் பரவலாக பல ஆண்டுகளாக வானில் அவதானிக்கப்பட்ட ஒரு பிரகாசமான வால்வெள்ளி ஆகும். இது கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு வானில் வெற்றுக் கண்களுக்குத் தெரிந்து சாதனை படைத்தது. இதற்கு முன்னர் 1811 இல் தெரிந்த வால்வெள்ளி 260 நாட்களே வெற்றுக் கண்களுக்குத் தெரிந்தது.ஹேல்-பொப் ஜூலை 23 1995 இல் சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டபோது சூரியனுக்குக் கிட்டவாக வரும்போது இது மிகப் பிரகாசமாகத் தெரியலாம் என அன்றே எதிர்பார்க்கப்பட்டது. இது சுற்றுப்பாதை வீச்சை ஏப்ரல் 1, 1997 இல் கடந்தது. இது 1997 இன் மிகப்பெரும் வால்வெள்ளி எனப் பெயர் பெற்றது.இவ்வால்வெள்ளி கண்ணில் இருந்து மறைந்தாலும், தற்போதும் இது வானியலாளர்களால் அவதானிக்கப்படுகிறது. ஜனவரி, 2005 இல் பெறப்பட்ட தரவுகளின் படி சூரியனில் இருந்து யுரேனசைவிட அதிகளவு தூரத்தில் பூமியில் இருந்து 21 AU தூரத்தில் ஹேல்-பொப் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பெரும் தொலைநோக்கிகளைக் கொண்டு தற்போதும் அவதானிக்க முடிகிறது. பெரும் தொலைநோக்கிகளைக் கொண்டு 2020ம் ஆண்டு வரையில் இதனை அவதானிக்க முடியும் என்றும் 4377 ஆம் ஆண்டில் இது மீண்டும் திரும்பும் என வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்