திருமணம் செய்து கொள்வார் என்று கூறித் தன்னைக் காதலித்து பின்னர் ஏமாற்றினார் என்று தெரிவித்து யாழ்.நகரைச் சேர்ந்த இளம் பெண், வங்கி ஊழியர் ஒருவ ருக்கு எதிராக நம்பிக்கை மோசடி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தனியார் வங்கி ஒன்றின் மன்னார் கிளையில் பணியாற்றி வரும் மன்னாரைச் சேர்ந்த எட்வேட் டெலிஷான் என்ற இளைஞருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். நகரில் வசிக்கும் செல்வி ஜே.ஜெயரட்ணசிங்கம் என்பவரே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெலிஷான் ஹற்றன் நஷனல் வங்கியில் பணியாற்றிவருகிறார். 2009ஆம் ஆண்டு அவர் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய போது அவருக்கும் செல்வி ஜெயரட்ணசிங்கத்துக்கும் இடையில் நட்பு ஏற்பட்டுப் பின்னர் அது காதலாக மாறியது.

„யாழ்.நகரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்று, நீதான் எனக்கு மனைவி என்று சொல்லி குங்குமப் பொட்டும் வைத்து மோதிரமும் அணிவித்தார்“ என்கிறார் செல்வி ஜெயரட்ணசிங்கம்.திருமணம் செய்துகொள்வார் என்று டெலிஷான் வழங்கிய உறுதி மொழியை அடுத்து செல்வி ஜெயரட்ணசிங்கம் அவருடன் நெருங்கிப் பழகி உள்ளார். டெலிஷானை முழுமையாக நம்பியதன் அடிப்படையில் எல்லை கடந்து இந்த உறவு நீண்டுள்ளது. யாழ்ப் பாணம், வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் அறைகளில் இருவரும் தனித்துத் தங்கியிருக்கும் அளவிற்கு அவர்கள் இடையிலான நெருக்கம் வலுத்துள்ளது.

எனினும், ஒரு வருட காலம் கடந்த பின்னர் டெலிஷானின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.“அவர் என்னை விட்டு விலகிச் செல்கிறார் என்று தோன்றியது. தொடர்புகள் குறைந்து வந்தன. தொடர்பை ஏற்படுத்த முயன்றாலும் அவற்றைத் தவிர்த்தார்“ என்கிறார் செல்வி ஜெயரட்ணசிங்கம். டெலிஷானின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே செல்வி ஜெயரட்ண சிங்கம் மன்னாருக்குக் கிளம்பிச் சென்றார். தனது தகப்பனுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று காரணம் கூறி அவரைத் தவிர்க்கப் பார்த்துள்ளார் டெலிஷான். விடாமல் கேட்டபோது „நீ என்னை மனதார நேசிப்பதாக இருந்தால் என்னைத் தொந்தரவு செய்யாது விலகிவிடு“ என்று பதில் சொல்லியுள்ளார்.
அதிர்ந்து போன செல்வி ஜெயரட்ண சிங்கம், என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாது பரிதவித்துள்ளார். பின்னர் தெளிந்து இத்தகையவர்களை சும்மா விடக்கூடாது என்ற உத்வேகத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்
 
டெலிஷானுக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கையும் மன்னார் நீதிவான் நீதிமன்றில் நம்பிக்கை மோசடி வழக்கையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.இந்த விடயம் குறித்து டெலிஷானுடன் தொடர்பு கொண்டு அவரது தரப்பு விளக்கத்தைக் கேட்க முயன்றபோது, „நீங்கள் உதயனில் இருந்துதான் பேசுகிறீர்கள் என்று எப்படி நான் உறுதிப்படுத்துவது“ என்று கேட்டுவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டார். பின்னர் அவரைத் தொடர்பு கொள்ளப் பலமுறை முயன்ற போதும் தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.