போலி கடனட்டைகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கணினிப் பொறியிலாளர் ஒருவர் உட்பட்ட ஐந்துபோரை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:
கைது செய்யப்பட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவின் தலைவராக மட்டக்களப்பைச் சேர்ந்த இந்தப் பொறியியலாளரே செயற்பட்டு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.சிங்கப்பூரில் கணினித்துறையில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள இவர் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் தன் நண்பர்களுடன் கூட்டு வலையமைப் பொன்றை மேற்கொண்டு போலிக்கடனட்டைகள் மூலமாக பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

வெளிநாட்டவர்களின் கடனட்டைத் தகவல்களைப் பெறுவதற்காக இவர் இணையத்தளம் ஒன்றுக்கும், உள்நாட்டவர்களின் கடனட்டைத் தகவல்களுக்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்கள் பலருக்குப் பெரும் தொகைப் பணத்தை மாதாமாதம் கொடுத்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.கள்ளத்தனமாகப் பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடனட்டைகளின் தகவல்களைக் கொண்டு போலிக் கடனட்டைகளை தயாரிப்பதற்காக கனடா மற்றும் இந்தியாவிலிருந்து இரண்டு இயந்திரங்களையும் இவர்கள் கொள்வனவு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இவருக்கு உதவியாகச் செயற்பட்ட ஒரு தமிழரும் மூன்று முஸ்லிம்களுமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.