பெண்ணொருவரிடம் தாலிக்கொடியை அபகரித்தனர் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்து மாறும் சாவகச்சேரி நீதிவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

 இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது:
பிறந்த தினத்தன்று ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டு பெற்றோரிடம் ஆசிபெற வந்த பெண்ணொருவர் 4 லட்சத்தி 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தாலிக்கொடியைப் பறிகொடுத்தார்.இந்தச் சம்பவம் கடந்த 7ஆம் திகதி சனிக்கிழமை சரசாலையில் இடம்பெற்றுள்ளது. சைக்கிளில் வந்த இந்தப் பெண் வீதியில் பேருந்து நின்ற தால் சைக்கிளை நிறுத்தியபோது தொப்பி கீழே வீழ்ந்தது அதனை எடுக்கக் குனிந்தபோது அவ்வழியே தலைக்கவசம் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாலிக் கொடியை இழுத்து அறுத்துக்கொண்டு தப்பியோடினர்.மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அவதானித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.பொலிஸார் படையினரின் உதவியுடன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மோட்டார் சைக்கிளில் வந்த மீசாலை மேற்கு மற்றும் மந்துவிலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்தனர். தாலிக்கொடியையும் மீட்டுள்ளனர்.தென்மராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டுக்களுக்கும் இவர்களும் தொடர்பு உள்ளதா என்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது எதிர்வரும் 25ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.