யாழ். ஸ்ரான்லி வீதியில் மக்கள் வங்கிக்கு அருகில் இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இருவரும் காயமடைந்தனர்.

ஸ்ரான்லி வீதியில் உள்ள கடையொன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளைத் திருப்பிய வேளை எதிரே அதிவேகமாக வந்த இன்னுமொரு மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டமையினாலேயே இவ் விபத்து இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் யாழ். பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த நாகரத்தினம் சஞ்சீவன்(வயது 23) தலையில் அடிபட்டு காயமடைந்த  நிலையிலும், யாழ். அச்சக வீதியைச் சேர்ந்த பிலிப்புப்பிள்ளை ஜோன்மாக்ஸ் (வயது 35) காலில் அடிபட்டு காயமடைந்த  நிலையிலும் சிகிச்சைகளுக்காக அருகில் நின்றவர்களினால் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரது மோட்டார் சைக்கிள்களும் மிகவும் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். காவற்றுறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் விபத்தில் காலில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டவர், சேர்க்கப்ட்டு ஒரு மணி நேரம் கடந்தும் மருந்து எதுவும் கட்டப்படாத நிலையில் காணப்பட்டார். இன்று சனிக்கிழமை பயிற்சி மருத்துவர்கள் வராமையினாலேயே மருந்து கட்டுவதற்கு கால தாமதம் ஏற்படுகின்றது என மருத்துவ விடுதியில் தெரிவிக்கப்பட்டது.