வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் இலங்கையில் உள்ள அசையா சொத்துக்கள் இலங்கை அரசினால் விரைவில் பொறுப்பேற்கப்படும் என்று சாரப்பட சில வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை.

ஆதாரம் எதுவும் அற்றவை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்த சில சக்திகள் முயலுகின்றன. அது குறித்து தமிழ் மக்கள் அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் முடிவுற்ற இந்த வேளையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எமது நாட்டிற்கு வந்து முதலீடுகளை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முன் வருமாறு கோரியிருந்தார்.

இந்த கால கட்டத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் எமது தமிழர்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் கைங்கரியத்தில் சில சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. எனவே வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் எந்தக் குழப்பமும் அடைய தேவையில்லை.

குறிப்பாக வெளிநாடுகளில் வசிப்பவர்களின் குடா நாட்டிலுள்ள அசையாச் சொத்துக்களுக்கு சட்டபூர்வமற்ற பலர் உரிமை கோரி வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனை நேர் சீர் செய்யும் வகையில் வெளிநாட்டில் உள்ளோர் தங்களின் உடைமைகளுக்கு உரிய பொறுப்பாளர்களை சட்ட ரீதியாக ஒழுங்கமைத்துக்கொள்ளுமாறு நான் இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றேன்.

சட்ட ரீதியான பொறுப்பாளர்களிடம் குடா நாட்டு காணிகள் ஒப்படைக்கப்படுவதையே அங்குள்ள இராணுவத்தினரும் விரும்புகின்றனர் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவிடம் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனவே குடா நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த 430,000 பேரின் சொத்துக்கள் அரச உடைமையாக்கப்படுவது குறித்து வெளிநாட்டுத் தமிழ் இணையத்தளங்களில் அண்மையில் வெளியான செய்தி தவறானது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் குடா நாட்டிற்கு வந்து தமது அசையா சொத்துக்களை பார்வையிட்டு உரிய பொறுப்பாளரிடம் சட்ட ரீதியாக ஒழுங்கமைத்து கொள்ளுமாறு இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.