காதலும் வீரமும் தமிழனின் இரு கண்கள் எனக் கூறிய சங்க கால இலக்கியங்கள் தமிழனுடைய கண்களுக்கு சமமாக காதலுக்கு சிறப்பிடம் அளித்தனர். “செம்புலப் பெயர் நீர் போல் ஒன்றாக கலந்து அன்புடைய நெஞ்சங்களின்; ஒன்றிப்பே காதல்” என முன்மொழிந்தனர். தொன்று தொட்டு காலமாக தமிழரின் ஒழுக்கமாக காதல் பேசப்பட்டு வந்தது.

ஆனால் இன்று எமது யாழ்ப்பாணத்தில் காதல் என்ற பேரில் சமூக சீர்கேடுகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் எமது சமுதாயத்தினர். காதல் என்றால் இன்று எமது மூத்தோர்களால் அருவருப்பாக பார்க்க கூடிய நிலைக்கு எமது இளைய தலைமுறையினர் காதலை சீரளித்து வைத்துள்ளனர். “புனிதமான தெய்வீகக் காதல்” தற்போது அசிங்கமான காதல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அன்பு கொண்ட இரு உள்ளங்களின்; வெளிப்பாடாக தோன்றிய காதல் இன்று எமது சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிலையில் காணப்படுகின்றது.

காதலின் புனிதம் தாய்பரியத்தினை அறியாத இன்றய இளைய சமுதாயம் காதலை கொச்சைப் படுத்தி நிற்கின்றனர். “கண்டதே காதல் கொண்டதே மோகம்” என்ற நிலையில் இன்றய யாழ்ப்பாணத்து இளைஞர் யுவதிகள் காதல் செய்கின்றனர். அன்று சம்மந்தர் காதலாகி கசிந்து என்று பாடிய போது காதல் பக்தியின் வெளிப்பாடாக தோன்றியது.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான் என்ற இராமாணயனக்காதலையும் கடந்து தற்பொழுது நொக்கியாவில் தொடங்கி பேஸ்புக் ஈறாக தொடர்ந்து இன்று இவற்றுக்கும் மேலாக கள்ளக் காதல் என்ற ரீதியில் இன்றய யாழ்ப்பாணத்துக் காதல்கள் அமைகின்றன.

இன்று யாழ் நகரிலே பார்க்கும் இடமெங்கும் நீக்கமற ஜோதியாய் காதல் ஜோடிகள். காதல் என்ற பெயரில் காமத்தையே கொள்கையாக கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள் யாழ் நகரில் உள்ள பஸ்தரிப்பிடங்கள், இன்ரநெற் கபேகள், பேரூந்துகள், ஆன்மீகத்தை வளர்க்கும் ஆலயங்கள் என்றெல்லாம் பொது இடங்களில் தங்கள் காதலை வளர்கின்றனர். காதல் என்று மட்டும் சொன்னால் போதாது தமது காம லீலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

காதல் என்ற விதையை விதைத்து குடாநாட்டு இளைஞர்கள் யுவதிகளின் வயிற்றில் கருவை வளர்க்கிறார்கள். காதல் விதை கருவாக வளர்ந்து சிசுவாக மீண்டும் மண்ணில் புதைக்கப்படுகின்றது. இவ்வாறு இன்றய நிலையில் யாழ்ப்பாணத்துக் காதல்கள் அமைகின்றன. யாழ்ப்பாணத்து இளைஞர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய யுவதிகள் ஏமாற்றம் அடைந்து வாழ்வைத் தொலைத்து நிற்கதியாய் நிற்கும் பெண்களே இன்று குடா நாட்டில் அதிகம்.

யாழ்ப்பாணத்தில் பெருக்கம் அடையும் தற்கொலைகள் கருக்கலைப்பு முயற்சிகளும் சிசு கொலைகளும் இன்றய நவீன காதலால் உருவாகிய நிலையே ஆகும். ஆண்களுக்கு சமம் பெண்கள் என்ற நிலை காதலில் ஏமாற்றுவதிலும் வந்துவிட்டது.

தற்பொழுது குடாநாட்டில் ஆண்களுக்குப் போட்டியாக காதலித்து விட்டு ஏமாற்றுவதில் பெண்கள் நிகராக நிற்கிறார்கள். பணத்துக்காக உடலை விற்பவள் விபச்சாரி ஆனால் சுகத்திற்காக காதலை விற்க்கும் இவர்களை என்னவென்று சொல்வது…?

ஒரு வேளை இவளா பாரதி காணவிருந்த புதுமைப்பெண்…..?

தொன்று தொட்டு காலமாக அறிவை வளர்க்கும் இடங்களாக பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இருந்த வந்தன. ஆனால் தற்பொழுது காதலை வளர்க்கும் இடங்களாக இவை அனைத்தும் மாறிவிட்டன. இது தானா காலத்தின் மாற்றம்…….?

இப்படியே சென்றால் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிலை என்ன?

யாழ்ப்பாணத்து இளைஞர் யுவதிகளே சற்று சிந்தியுங்கள்.. “நாளைய எதிர்காலம் இளைஞர்களின் கையில்……..:” எனவே இந் நிலை மாறி யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து செல்லவேண்டியது எமது கடமையாகும். காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி சமூகத்தினை சீரளிவுக்கு இட்டுச் செல்லாமல் காதலின் புனிதத் தன்மையை உணர்ந்து ஒருவருக் கொருவர் அன்பை வெளிப்படுத்தி காதலின் தெய்வீகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுங்கள்.

உடலைக் கொடுப்பதை விடுத்து உள்ளத்தைக் கொடுத்து காதலை வெளிப்படுத்துங்கள். பொது இடங்களில் அநாகிமாக நடப்பதை விடுத்து காதலை நேசியுங்கள். காதலின் தற்போதயை நிலை மாற வேண்டும் மீண்டும் செம்புலப் பெயர் நீர் போல் ஒன்றாக அன்புடைய நெஞ்சங்கள் கலக்க வேண்டும். இனி மலரும் காதல்கள் சமூகத்தில் விருப்பப்படும் உன்னதமான காதலாக மலரட்டும்.