இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2 இலட்சம் சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை கைவிடுவதாக சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்வியை இடைநடுவிலேயே கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகமாக காணப்படுகின்றது. யுத்தம், வறுமை மற்றும் பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட காரணங்களினாலேயே சிறுவர்கள் தங்களுடைய கல்வியை இடைநடுவிலேயே கைவிட்டுவிடுகின்றனர்.

இவ்வாறான நிலைமையினை நீக்குவதற்கு யுனிசெப் அமைப்போடு இணைந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு அதிகார சபை ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இலங்கையில் இருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகின்றது.

வெளிநாடு செல்கின்ற பெண்களின் கணவன்மார் சரியான முறையில் குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விடுவதுடன் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு அக்கறை காட்டாமல் விடுவதனாலுமே இவ்வாறான நிலைமை ஏற்படுகின்றது.

வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்பு தேடிச்செல்கின்ற பெண்களின் குழந்தைகள் குடும்பத்தினரால் முறையாக கவனிக்கப்படாமல் விடுவது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சுக்கு அறிவித்தால், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொள்ளும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.