MGRஏழ்மை, பசி, வறுமை ஆகிய சொற்களை வெறும் தமிழ் வார்த்தைகளாக மட்டுமே அறிந்திராமல், அவற்றை நெடுங்காலம் அனுபவித்துணர்ந்து, தனக்கு ஏற்பட்ட அந்த கொடிய நிலைமை வேறு யாருக்கும் இனி நேரக்கூடாது என இளம் வயதிலேயே அவர் சபதமேற்றார். தனது சபதத்தை நிறைவேற்றுவதற்கான தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்து-உழைப்பால் அந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்ட அசுர ஜாதகத்துக்கு சொந்தக்காரர், எம்.ஜி.ஆர். மட்டுமே என்றால்… அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடாக இருக்க முடியாது.


‘எம்.ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான் :
தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்...
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ’’அ.தி.மு.க நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 97-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒவ்வொருவரையும் இந்த மடல் வாயிலாக சந்திப்பதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

‘பொன்மனச் செம்மல்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும், ‘மக்கள் திலகம்‘ என்றும், ‘இதயக்கனி’ என்றும், இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். ‘எம்.ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம் ‘எம்.ஜி.ஆர்.’ என்னும் திருமந்திரம். திரையுலகிலும், அரசியலிலும் ஒருசேர பயணித்து, இரண்டு துறைகளிலும் வெற்றிக் கொடியை நாட்டிய ஒரே தலைவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும், உழைப்பால் உலகை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களுக்காகவும் நல் உள்ளத்தோடு பாடுபடுகின்ற உயர்ந்த மனிதர்களை ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் பார்க்க முடியும். எம்.ஜி.ஆர். அத்தகைய ஒரு வரலாற்று மனிதர் மட்டுமல்ல, அவரை ஒத்த சரித்திர நாயகர் களுக்கெல்லாம் இல்லாத மேலும் பல சிறப்புகளைப் பெற்றவர் ஆவார்.

இப்படிப்பட்ட ஒரு சரித்திர நாயகரை தலைவராகப் பெற்றிருக்கின்ற பெரும் பாக்கியம் இறைவனால் நமக்கு அருளப்பட்டது என்பதை நினைக்கும் போது உள்ளம் நெகிழ்கிறது. உணர்ச்சிகளின் மேலீட்டால் கண்களில் நீர் கசிகிறது. இப்படிப்பட்ட தலைவருக்கு விசுவாசமான தொண்டராக, உடன்பிறப்பாக, ரத்தத்தின் ரத்தமாக இறுதி மூச்சுவரை வாழும் வீர சபதம் மேற் கொள்ளும் தருணம் தான் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா.

பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.-வின் வளர்ச்சிக்கு உரமாகவும், வேராகவும் இருந்து அல்லும் பகலும் அயராது உழைத்து திமுக-வை ஆட்சிப் பீடத்தில் அமர்த்திய பெருமை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு உண்டு.

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின், எம்.ஜி.ஆர். தி.மு.க.-வின் தலைமைப் பதவிக்கும், முதல்–அமைச்சர் பதவிக்கும் போட்டியிட்டு வென்றிருக்க முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்று விளங்கியவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இருப்பினும், அரசியலில் கிடைக்கும் பதவியினை ஒரு பொருட்டாகவே அவர் நினைத்ததில்லை. அதனால் தான், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஒரு “கிங் மேக்கராக” செயல்பட்டு கருணாநிதியை முதல்–அமைச்சர் ஆக்கினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம் தி.மு.க.-வில் கொடி கட்டிப் பறந்தது. ஆட்சியிலும், கட்சியிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. மக்கள் துன்ப வெள்ளத்தில் தத்தளித்தனர். இதைத் தட்டிக் கேட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியை விட்டே நீக்கினார் கருணாநிதி.

நாட்டு நலன் கருதி, மக்கள் நலன் கருதி, மாபெரும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க உருவாக்கினார் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

சமத்துவ சமுதாயம் ஏற்பட வேண்டும்; அனைவருக்கும் கல்வி கிடைத்திட வேண்டும்; பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சத்துணவு கிடைத்திட வேண்டும்; பிறப்பாலும், வாழும் சூழலாலும் பிற்பட்டுப்போன மக்களுக்கு உரிய சமூக நீதி கிடைக்க வேண்டும்; ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும்; தீய சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும்; குடும்ப ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலர வேண்டும்; அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்;

இவை அனைத்தும் வன்முறை தவிர்த்த அமைதி வழியில் நிறைவேறிட வேண்டும் என்பதற்காகத் தான் அரசியல் களம் இறங்கினார் எம்.ஜி.ஆர். இப்படிப்பட்ட நல்ல நோக்கத்திற்காக அரசியலில் களம் இறங்கிய எம்.ஜி.ஆர். ஆட்சி முறையிலும், நிர்வாகத்திலும் அறிமுகம் செய்த மாற்றங்கள் எல்லாம் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மவுனப் புரட்சிகள்.

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இன்றளவும் மக்கள் மனங்களில் நிலைத்து குடி கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆரின் வழியில் நாம் இப்போது ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றோம். எம்.ஜி.ஆர். கண்ட கனவுகளை நனவாக்கவும், அவர் இட்டுச் சென்ற கட்டளைகளை நிறைவேற்றவும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நாள்தோறும் பாடுபட்டு வருகிறேன். எம்.ஜி.ஆர். மீது கொண்ட பக்தியே என்னை பொது வாழ்வில் இயக்கி வரும் தூய சக்தி என்பதை உணர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும்; தமிழர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; தமிழ் நாட்டிற்கு உரிய நிதியும், நீதியும் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் நான் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன். இந்த லட்சியம் நிறைவேற வேண்டும் என்றால், மாநிலங்களுக்கு மதிப்பளிக்கக் கூடிய, மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை கொடுக்கக் கூடிய, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரத்தை அளிக்கக் கூடிய, மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடாத ஒரு மத்திய அரசு அமைய வேண்டும்.

தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசோ, இருக்கின்ற அதிகாரங்களைப் பறிக்கக் கூடிய, ‘மாநில சுயாட்சி’ என்ற கொள்கையையே காலில் போட்டு மிதிக்கக் கூடிய அரசாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மத்திய அரசுக்குத் தான் சில மாதங்களுக்கு முன்புவரை ஆதரவு அளித்து வந்தார் கருணாநிதி.

மாநிலங்கள் வலுப்பெற்றிருந்தால் மட்டுமே இந்தியக் குடியரசு வலுப்பெற்றிருக்க முடியும். இதற்குத் தேவை மத்தியில் ஆட்சி மாற்றம். தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய ஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்பட வேண்டும். 20 ஆண்டுகளாக நிலவி வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு புது சிந்தனையுடன் மக்களின் தேவைகளைப் பரிவுடன் அணுகும் புதிய ஆட்சி ஏற்பட வேண்டும்.

எல்லா வகைகளிலும் வஞ்சிக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இவையெல்லாம் நடைபெற வேண்டும் என்றால், தமிழகம் அனைத் துத் துறைகளிலும் முன்னேறி இந்தியாவிலேயே முதன் மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால் நாம் சொல்வதைக் கேட்கக் கூடிய மத்திய அரசு அமைய வேண்டும்.

இந்த நன்னாளில், தமிழகத்தை வளப்படுத்த, பாரதத்தை வலிமைப்படுத்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றிக் கனியைப் பெறும் வகையில் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவருடைய களப் பணியும் அமைய வேண்டும்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய தேசத்தின் எதிர் காலத்தை முடிவு செய்யும் மாபெரும் சக்தியாக அ.தி.மு.க விளங்கும். அதுவே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் புகழுக்கு நாம் செய்யும் மரியாதை. ஆகவே, எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் இதையே சூளுரையாக ஏற்று, இந்த நல்ல நாளிலேயே நாடாளு மன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள் என்று அன்புக் கட்டளையிடுகிறேன்’’என்று கூறியுள்ளார்.