கோடை ஆரம்பித்து விட்டாலே உடலின் ஆரோக்கியமும் பாதிப்புக்கு ஆளாகிறது. கிளீனிக்குகளில் கூட்டம் அலைமோதுவதால் கோடை காலத்துக்கு டாக்டர்களின் சீசன் என்ற பெயரும் உண்டு.

வெப்பநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம். சில நகரங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அப்போது வெளியில் சென்றால் தலைசுற்றல், மயக்கம், வாந்தி, வயிற்று வலி போன்ற “சன் ஸ்ட்ரோக்” பாதிப்புகள் ஏற்படும்.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் சோர்வு, தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படும். வைரஸ் பாதிப்பால் அம்மை, தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்றவையும் கோடையில் தாக்குகிறது.

டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் ஏற்படுகிறது. இந்த கோடை நோய்கள் வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.

ஏசி அறையில் இருந்தவர்கள் உடனடியாக வெயிலில் வெளியே செல்லக் கூடாது. சிறிது நேரம் நிழலில் இருந்து விட்டு பின்னர் செல்ல வேண்டும்.

வெயில் காலத்தில் தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், வெளியிடங்களில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்றில் பாதிப்பு ஏற்படும்.

அதேபோல் கரும்புச்சாறு குடிப்பதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரும்பு ஜூஸ் விற்கும் பலர் அதன் தோல் பகுதியை முற்றிலுமாக நீக்குவதில்லை. அதில் உள்ள அழுக்குகள் மற்றும் பூஞ்சைகள் கரும்பு ஜூஸில் கலக்கும் அபாயம் உள்ளது.

இதனால் வயிற்றுபோக்கு, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம். தெருவோர கடைகளில் வெட்டி வைத்து விற்கப்படும் பழங்களை வாங்கி சாப்பிடுவது, கண்ட இடங்களில் தண்ணீர் குடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டில் தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும்.

தண்ணீர், திரவ உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். தர்பூசணி, பப்பாளி பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். கோடையில் மாம்பழம் சிறந்தது என்றாலும், அதிகம் சாப்பிடக் கூடாது.

வியர்வை மூலம் உடலில் உள்ள தாதுக்கள் வெளியேறும் என்பதால், அதை ஈடுகட்ட எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். கடைகளில் விற்கப்படும் ஐஸ்கட்டிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

அதன்மூலம் காலரா, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படுகிறது. கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், தயாரித்தவுடன் சாப்பிட வேண்டும். தாமதமாக பிரிட்ஜில் வைக்கப்படும் உணவு நச்சாக மாறும் வாய்ப்பு உள்ளது. கோடையில் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், நார்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆடை விஷயத்திலும் கவனம் தேவை. மெல்லிய நிறத்தினாலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

மெத்தை, சோபாக்களில் படுப்பதை தவிர்த்து, கோரைப் பாய்களில் படுக்க வேண்டும். கோடையில் கொசுக்கள் மூலமும் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.

ஏர்கூலர் பயன்படுத்துபவர்கள், அதில் பயன்படுத்தும் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த தண்ணீர் மூலம் கொசுக்கள் பெருகும். வெயிலில் சுற்றுபவர்கள், தாகத்தை தணிக்க பால் சம்பந்தப்பட்ட குளிர்பானங்களை சாப்பிடுவது வழக்கம்.

இந்த குளிர்பானங்களை வைத்திருக்கும் ப்ரீசர் பெட்டியை ஒழுங்காக பராமரிக்கவில்லையென்றால் அது சலமோனெல்லா டைபி என்ற ஒருவகை டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்தும் என்கிறார் டாக்டர் கனகராஜ்.

ரெசிபி

மாங்காய் சட்னி: அதிகம் புளிப்பு இல்லாத மாங்காயை பொடியாக துருவிக் கொள்ளவும். 4 காய்ந்த மிளகாய், வெந்தயம், கடுகு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து அதில் மாங்காயை போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

கடைசியில் அரைத்து வைத்துள்ள பொடியைத் தூவினால் மாங்காய் சட்னி தயாராகி விடும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இதை போட்டு பிசைந்து சாப்பிடலாம். ரொட்டி, தோசை ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிடலாம். மாங்காய் சட்னி உடல் சூட்டை தணிக்கும்.

உருளைக்கிழங்கு சாலட்: வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்குகளை ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து சாலட்டில் போட்டு கிளறவும். பின்னர் கொத்தமல்லி தழைகளை தூவி சாப்பிடலாம். இதில் சிறிதளவு கட்டித்தயிர் சேர்த்தால் சுவையாக இருக்கும். வெயிலுக்கும் நல்லது.

வெஜிடபிள்ஸ் ப்ரெட் உப்புமா: காரட், உருளை, பீன்ஸ் காய்களை பொடியாக அரிந்து வேக வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த காய்கறிகள், பட்டாணி, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவைத்த காய்களை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பின்னர் சதுரமாக வெட்டிய ப்ரெட் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறவும். வெஜிடபிள் உப்புமா உடல் நலத்துக்கு உகந்தது.

பாட்டி வைத்தியம்

மிளகு, வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி, கஷாயத்தை மூன்று நாட்கள் குடித்தால் மற்றவரிடம் இருந்து அம்மை நோய் பரவாது.

வெங்காயச் சாறு எடுத்து அதை நீராகாரத்தில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நீர்கடுப்பு பிரச்னை தீரும்.

நறுக்கிய வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இளஞ்சூடாக இருக்கும் போது பருகினால் நீர்கடுப்பு குணமாகும். அதிக வலி இருந்தால் வெங்காயத்தை பச்சையாக மென்று தின்னலாம்.

கோடை மலச்சிக்கலுக்கு வெண்ணெய் சிறந்த மருந்து. அதை உருக்கி ஆறவைத்த பின் மேலே தெளிந்து நிற்கும் நெய்யை, இரு வேளை சாப்பிட்டால் குணமாகும்.

தொண்டை வலி தீர தயிரில் வெங்காயம் மற்றும் சர்க்கரையை கலந்து சாப்பிடலாம்.

உடலில் வேனல் கட்டி ஏற்பட்டால் வெண்ணையில் சுண்ணாம்பு கலந்து தடவினால், கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

வெயில் காலங்களில் அதிக அளவு வியர்க்கும் என்பதால், குழந்தைகளுக்கு ஜலதோஷம் மூக்கடைப்பு, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை போக்க பூண்டை பாலில் அரைத்து கொதிக்க வைத்து நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அரை டீஸ்பூன் அளவு கொடுக்கலாம்.

உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று போக்கு பிரச்னைக்கு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து அதனுடன் சோம்பு, உப்பு சேர்த்து பொடித்து மோரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டயட்

பொதுவாக வெயில் காலங்களில் பசி எடுக்காது. அதற்காக பட்டினி கிடந்தால் உடல் பலவீனமாகிவிடும். மனதுக்குப் பிடித்த உணவுக்கு பதிலாக, உடலுக்குத் தேவைப்படும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பருவகாலங்களுக்கு ஏற்ப கிடைக்கும் உணவுகள் மற்றும் பழங்கள் மருந்தாகவும் செயல்படும். கோடையில் இயற்கை உணவுகள் இதமளிக்கும். தர்பூசணி கோடையின் வரப்பிரசாதம்.

80 சதவீத தண்ணீர் சத்து உள்ள தர்பூசணி, உடலில் தண்ணீரின் அளவை சமன்படுத்தி புத்துணர்வை அளிக்கிறது. கிர்ணிப்பழமும் கோடைக்கு ஏற்றது.

பச்சைக்காய்கறிகளை சாலட்டாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அவற்றில் உள்ள சத்து சூரிய வெப்பத்தால் தோல் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. பசியையும் கட்டுப்படுத்துகிறது.

கோடை காலத்தில் சமையலில் பூண்டு அவசியம் இடம் பெற வேண்டும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் ரத்தத்தை சுத்திகரித்து செரிமானத்தை சீராக்கும். வயிற்று உப்பிசம், மலச்சிக்கல் குணமாகும்.

கீரையை அதிக அளவில் சேர்க்க வேண்டும். வெள்ளரி, இளநீர், மோர், நுங்கு உடலுக்கு குளுமையை தரும். சத்தான இயற்கை உணவுகள் கோடைக்கு நல்லது என்கிறனர் உணவு நிபுணர்கள்.