யாகங்கள் செய்து, யோகங்கள் சேர்ப்பவர். வாஸ்துவில் வல்லவர். ஜோதிடத்தில் புலமை பெற்றவர். அனுமன்  உபாசகர். விருக்ஷ சாஸ்திர வித்வான். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா கயிலை சென்று இறையனுபவம் பெற்று வந்தவர். அவர் தனது ஆன்மிகப் பயணம் குறித்த அனுபவங்களைக் கூறுகிறார்.

அன்பர்கள் எல்லா வளமும் பெற கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்கிறோம்.

வசந்த், பாரி, சிவப்பிரகாசம், சம்பத் ஐயங்கார், ராகவன் ஆகியோர் நம்மை சந்தித்து கயிலாய யாத்திரை செல்வது பற்றிப் பேசினார்கள். நாம் பலவித காரணங்களால் சற்று யோசிக்க, வந்திருந்தவர்கள், „“பயணச் செலவைப் பற்றி கவலைப்படாதீர்கள்; நீங்கள் மானசரோவரில் ஒரு யாகம் செய்தால் போதும். மற்றவற்றை எங்களிடம் விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்“ என்றார்கள். அவர்களுடன் திருக்கயிலாய யாத்திரை கிளம்பினோம். ராகவன் முன்கூட்டியே  டெல்லி சென்று பயண ஏற்பாடுகளை சரி செய்து வைத்திருந்தார். அன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு நேபாள தலைநகர் காட்மண்டு சென்றோம். தங்குவதற்கு நல்ல இடம், மூன்று வேலையாட்களையும் பாண்டே ஏற்பாடு செய்திருந்தார். நேபாள்கஞ்சிலிருந்து ஆகாய வழியாக சிம்கோட் சென்றோம். அங்கிருந்து ஹில்சாவிற்கு ஆகாய வழியாக ஒரு மணி நேரம் சென்றோம். அந்த இடம் இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறது என்று தோன்றுகிறது. திறந்த வெளியில் மலைகள் சுற்றி இருக்க சீறிப் பாய்ந்து வரும் நதி திகைக்க வைத்தது.

சலிப்பூட்டும் அனுபவம்!ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா

ஹில்சாவிலிருந்து திபெத்திற்கு நீண்ட இரும்பு தொங்கு பாலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கு சுமைதூக்கிகள் மிக உதவியாக இருந்தனர். ஏழ்மை நிலையிலும் நல்ல உள்ளத்துடன் ஒத்துழைத்தனர்.

அப்பொழுது மருத்துவர் மோகனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தன் தாயார் ராஜலஷ்மி அம்மாளுடன் வந்திருந்தார். அவருக்கு 70 வயது இருக்கும். தள்ளாத வயதிலும் மனோதிடத்துடன் ஆன்மிக அனுபவம் தேடி புறப்பட்டு வந்திருந்தார். வயதானவர்களை உடன் வைத்துக்கொள்ள யோசிக்கும் இந்தக் காலத்தில், தன் அம்மாவின்மேல் வைத்த அன்பால் அவரை அழைத்துக் கொண்டு சிரமங்களைத் தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கும் மருத்துவர் மோகனைப் பார்த்த மாத்திரத்திலேயே கயிலாசநாதனைத் தரிசித்த புண்ணியம் கிடைத்துவிட்டது என்று தோன்றியது.
எங்களுடன் மும்பையிலிருந்து வந்த மருத்துவரையும் சேர்த்து மூன்று மருத்துவர்கள் உடன் இருந்தார்கள். அனைவரும் திபெத் எல்லையை அடைந்து சோதனைச் சாலையைத் தாண்டி „தக்னாகோட்‘ சென்றோம். அங்கிருந்து புறப்பட்ட நாங்கள், முதலில் தரிசித்தது ராக்ஷஸ தால் ஏரியிலிருந்த கயிலாயநாதரைத்தான்.
இராவணனின் ராக்ஷஸ தவம்
இந்த ராக்ஷஸ தால் ஏரி கந்தகம் நிறைந்ததாக உள்ளது. இங்கு இராவணன் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. காற்றில் கந்தக வாசனை வீசுகிறது. இந்த நீரை யாரும் தொடுவதோ உபயோகப்படுத்துவதோ இல்லை. இன்றும் ராக்ஷஸர்கள் இந்த நீரின் அடியில் உள்ளதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர். இதை சிலர் இராவணன் ஏரி என்று அழைக்கிறார்கள். ஒரு திபெத்தியர் எங்களிடம், யாக் எருமைத் தோலில் செய்த ஒன்று இதில் விழுந்ததாகவும்; கைலாயத்தின் மறுபக்கம் அது வெளிப்பட்டதாகவும்; எனவே விஷம் நிறைந்த இந்த ராக்ஷஸ தால் ஏரியின் நீர் கயிலாயத்தின் உள்புறம் சென்று வெளிப்புறம் வருவதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியை அறியும்போது, சிவபெருமான் ஆலகால விஷம் அருந்தியதாகக் கூறப்படுவதற்கும் இதற்கும் ஏதோ தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது. உடன் வந்த சமையற்காரர்கள் சாதம், ரொட்டி, பருப்பு போன்றவை தயார் செய்தனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு மானசரோவரை அடைந்தோம்.
மானசரோவரில் ஓரு மகத்தான வேள்வி
மானசரோவர் ஏரி என்பது உலகிலேயே உயரமான ஏரியாகும். மரீசி, வசிஷ்டர் போன்ற முனிவர்கள் நீராட பிரம்மாவால் படைக்கப்பட்டதாகும். பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றியதால் இது மானசரோவர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தங்க அன்னமும், அபூர்வமான பறவைகளும் உள்ளன. மானசரோவரையும் சுற்றி வந்து வழிபடுகிறார்கள். இங்குள்ள புகழ்பெற்ற பௌத்த கொம்பாவில் (ஆலயம்) ஐந்தடி உயரமுள்ள புத்தர் சிலையும்; சிலைக்கு இடப்புறத்தில் „கோப தெய்வம்‘ என்ற உருவமும் வரையப்பட்டுள்ளது. இங்கு பழைய புனித நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மானசரோவர் ஏரி சமுத்திரம்போல் அலைகளுடன் காணப்படுகிறது. மானசரோவரில் ஜெபம், பூஜை, ஹோமம் முதலியவற்றை அற்புதமாகச் செய்தோம். சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் கொடுத்து அனுப்பிய புளியோதரை பொடி போன்றவை எந்த வசதியுமற்ற அந்த இடத்தில் பிரசாதங்கள் தயார் செய்ய வசதியாக இருந்தது. அதன்பின் மானசரோவரிலிருந்து புறப்பட்டு தார்சனில் தங்கி „அஷ்டபத்‘ என்ற இடத்திற்குச் சென்று தரிசனம் செய்தோம்.

கயிலாயநாதனின் கருணையே காப்பாற்றியது!

மானசரோவரிலிருந்து அஷ்டபத் தரிசனத்திற்கு குழுவாக நாங்கள் காரில் புறப்பட்டோம். காரின் நான்கு சக்கரங்களும் இன்ஜினின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. கல், மண், சேறு, நீர் ஆகியவற்றில்கூட இந்த வண்டி அபாரமாகப் பயணிக்கிறது. வண்டி ஓட்டுநர்கள் திறமையாகச் செயல்படுகின்றனர்.

அஷ்டபத் தரிசனம் என்பது தென்முக கயிலாய தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. தட்சிணாமூர்த்தி திருக்கோலம் என்றும் கூறுகிறார்கள். இது முக்கியமான இடமாகும். இங்கு மகாசிவராத்திரி அன்று ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் முக்தி பெற்றார் என்று கூறப்படுகிறது. கயிலாயத்தின் வலப்புறம் நந்தி பர்வதமும், இடப்பக்கம் மகாகாள மலையும் இருக்கின்றன. மகாகாள மலை சிவபெருமானின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. நந்தி பர்வதத்தின் தலை, காளை மாட்டின் தலையை ஒத்திருக்கிறது. நந்தி பர்வதத்தின் வலப்பக்கம் பல குகைகள் உள்ளன. இதனுள் கற்பக விருட்சம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு வழியாக அஷ்டபத் தரிசனம் செல்லலாம். ஒன்று சிறிய குன்றின் மீதேறிச் செல்வது; மற்றொன்று நதியின் வழியாகச் செல்வது. நதி வழியாகச் செல்வது எளிதாகத் தோன்றினாலும் சற்று ஆபத்து நிறைந்தது. எதிர்பாராத சிறிய வெள்ளம் வந்தால்கூட நாம் எந்தப் பக்கமும் ஒதுங்குவது மிகவும் கடினம். நாங்கள் சென்றபோது நீர் மட்டத்தின் உயரம் ஒரு அடிதான் இருந்தது. அதை நம்பி அந்த நீரில் கால் வைத்த கவி முரளிகிருஷ்ணா அதனுள் விழுந்து இழுக்கப்பட்டார். ஆனால் கைலாயநாதனின் கருணையால் கரை ஏறினார்.
பார்வதி திருக்கல்யாணம்- பரம ரகசியம்!
அஷ்டபத்தில் நந்தி பர்வதம் ஓர் அற்புதமான காட்சி. பார்வதி திருக்கல்யாணம் இயற்கையாகக் காணப்படுகிறது. ஒரு பெரிய பிரகார மேடை போன்று உள்ளது. அது சுமார் ஆயிரம் அடி இருக்கலாம். அதில் பார்வதி திருக்கல்யாணம் தென்படுவது ஆச்சரியமான விஷயம். உற்றுப் பார்க்கையில் யானையின் முகம் தெளிவாகத் தெரிகிறது. நாரதரோ, தும்புருவோபோல உருவமும் தெரிகிறது. இது மனிதர்களால் மட்டுமல்ல; தேவர்களால்கூட செய்திருக்க முடியாது. கைலாயநாதன் தானே கருணை கொண்டு நமக்கு மட்டுமின்றி; தேவர்களுக்கும் இவ்வாறு புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார் போலும். தார்சனில் தங்கி அதன்பின் மறுநாள் „பரிக்ரமா‘ சென்றோம்.

முதல்நாள் பரிக்ரமா „தேவர்களின் பள்ளத்தாக்கு‘ என்ற இடத்திலுள்ள எமத்வாரில் இருந்து துவங்கியது. மலைவாழ் மக்கள் போனி என்ற மட்டக்குதிரையை வைத்துள்ளனர். சீட்டுக்களைக் குலுக்கி குதிரைகளைப் பிரித்துக் கொடுக்கின்றனர். மலைவாழ் மக்களின் தலைவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார். உடன் வரும் சுமைதூக்கி பொறுப்பாக நடந்து கொள்கிறார். எல்லா தேசங்களிலும் வாழ்க்கை வித்தியாசமாக இருந்தாலும், ஏழ்மை மட்டும் ஒரே மாதிரியாகத் தென்படுகிறது.

அன்று மாலை ஆறு மணிக்குமேல் திரபுக் மண்வீட்டில் தங்கினோம். பரிக்ரமாவில் திரபுக் என்ற இடத்தில் இராவணன் தடி என்ற பாறையும் உள்ளது. இரண்டாம் நாள் பரிக்ரமாவில் குளிர் சற்று அதிகமாகத் தென்பட்டது.

„பொன்னார் மேனியனே!
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை அணிந்தவனே‘

என்றபடி, காலை ஐந்தரை மணிக்குமேல் சூரியன் உதயமாகும்போது, வெண்பனியாக இருக்கும் கயிலாயமலையிலே சொர்ணத்தை உருக்கி வார்த்ததுபோல் தகதகவென்று மிக அற்புதமாக கைலாயநாதர் தரிசனம் அளிக்கிறார்.
கயிலாயநாதனுக்கு கண்ணீரால் அபிஷேகம்…
திரபுக்கில் இருந்து கிளம்பி டோல்மாபாஸ் வழியாக கௌரிகுண்டத்தை தரிசித்து துஜில்புக் என்ற இடத்தில் தங்கினோம். அங்கிருந்து மாலை சுமார் 4.30 மணிக்கு மூன்று சிறிய மலைகளைக் கடந்து கயிலாயநாதனை தரிசிக்கக் கிளம்பினோம். வசந்த், பாரி இருவரும் முதலில் கிளம்பிச் சென்றுவிட்டனர். நானும் சிவப்பிரகாசமும் ஆன்மிக விஷயங்களைப் பேசிக்கொண்டு பின்னால் சென்றோம். அந்த இடத்தில் அபூர்வமான அமைதி. தேவர்கள், பூதகணங்கள், யக்ஷர்கள், நாகர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், மகரிஷிகள் போன்றவர்கள் அரூபமாக இருந்து கயிலாயநாதனின் கருணையை வேண்டி நிற்கின்றனர். அவர்கள் நம் கண்ணுக்குப் புலப்படா விட்டாலும் ஆன்மிக உணர்வுகள் கிளர்த்தெழுந்தன. கயிலாயநாதனைக் கண்டவுடன் பாரி கண்களில் நீர் சொரிய வணங்கி நின்றார். எங்களில் அவரே வென்றார். அரிய மந்திரங்கள் ஜெபித்தும் பூஜைகள் செய்தும் யாகங்கள் செய்தும் சென்ற நம்மைவிட அவர் உயர்ந்தவராகத் தோன்றினார். பாகவதங்களில் கூறப்படுவது போல் இறைத் தோற்றத்தைக் கண்டவுடன் கண்ணீர் மல்கி நிற்பவரே உண்மையான பக்தர் என்பதை பாரி நிரூபித்தார். தோற்றத்திற்கும் உள்ளத்திற்கும் சம்பந்தம் இல்லை. தோற்றத்தை வைத்து எவரையும் எடைபோடக்கூடாது என்று தெரிந்து கொண்டோம். மூன்றாம் நாள் பரிக்ரமாவின்போது சுமார் ஐந்தாறு கிலோமீட்டர் நடைப்பயணமாக இருந்தது. அங்கிருந்து காரில் புறப்பட்டு தார்சன் வந்தடைந்தோம்.
சத்திய சொரூபமே! சாளக்கிராமமே!
சாளக்கிராம மலையை ஆகாயவழியாக நேபாள் பொக்கோராவிலிருந்து ஒரு மணி நேரத்தில் சென்றடைய முடியும். இங்குள்ள மலையே சாளக்கிராமம். இங்கு கண்டகி நதி பிறந்து சாளக்கிராமத்தை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இங்குள்ள பெருமாளின் பிரசாதம் சாளக்கிராம வடிவப் பெருமாளே! திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு ஒரு பெண்தான் பூஜை செய்து கொண்டிருந்தாள். அனுஷ்டானம், சம்பிரதாயங்கள் குறைவு. ஆனால் பக்தியை விவரிக்க இயலாது. சத்திய சொரூபமாக முக்திநாதப் பெருமாள் காட்சி தருகிறார். இவரை தரிசித்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. கடைசி நீரை அருந்தியவனுக்கு மரண பயம் இல்லை. ஒவ்வொரு வைணவரும் தரிசிக்க வேண்டிய அற்புதமான தலம். அங்கிருந்து கிளம்பி பொக்கோராவை அடைந்தோம். அன்றிரவு நல்ல மழை பெய்தது.

ஆன்மிக அனுபவங்களுடன் அற்புத யாத்திரை முடித்து நேபாளில் இருந்து சென்னை வந்தடைந்தோம். சொற்களில் விவரிக்க முடியாத இறையானந்தம் மனம் முழுக்க நிறைந்திருக்கிறது.