ammaகிளிஞ்ச பாய்  

பழஞ்சோத்து நீர்  

ஆனாலும் கூட  

கனவுக்குடித்தனத்துக்கு 

கிளியோபற்றாவை தேடுகிற அண்ணன்;

 

ஊர் சுற்றும் தம்பியால் 

பீடி சுத்தும் அம்மா

 காச நோய் கண்டதனால் 

பேசாப்பொருளான  அப்பா

 சீதனம் கேட்டுவரும் 

தவணை முறைத் துன்பத்தால்  

வாழாவெட்டியாய் வாழும்  அக்கா

 

 போருக்குப்  பேர் போன தேசத்தில்

 காணாது போன கணவன்

 பசிதான்  மூத்த பிள்ளை பேசிய  முதல் வார்த்தை 

  முதுகெலும்பை பிச்செடுத்த  

ஒரு இஞ்சி செல் துண்டால்  

பேசவே முடியாத  கடைசி மகன்

 

 இப்படியாக இவள்  இத் தொழில்

வர இருந்தன  ஏராளம் காரணங்கள்  

விரும்பித் தெரிவு செய்த  விருப்பமில்லா தொழில்

 பாவ புண்ணியம்  கௌரவம் பார்க்கில்  

இந்தப் பசிமயக்கம் போகாதென்பதால்  

யாருக்கும் தெரியாது இரகசியமாக  ஏற்றதொழில்

 இரைப்பை நிரவ நடக்கும்  கருப்பை வியாபாரம்

 

 மருந்தே கதியென காத்திருக்கும்  

காசநோய்க்காரன் போல்  

ஆசைநோய்  பிடித்;;த மீசைகளால் 

திசைமாறிக்கிடக்கிறது

ஒரு  குலமகள் வாழ்க்கை

 இவளென்ன  பொதிசுமக்கும் கழுதையா  

அல்லது  நிறை காட்டும் எந்திரமா  

இன்னும் எவ்வளவு காலத்திற்கென்றுதான்  

இந்த பாரச்சிலுவைகளையெல்லாம்  சுமப்பது

 

 உடலை வாட்டி  உழைக்க வந்தவளை  

உறுப்பைக் காட்டி உழைக்க வைத்தது  யார் இழைத்த காலப்பிழை

 கணவனைப்பற்றிக் கேட்டால்  

அரசனோ கைவிரிக்கிறான்  

வருவான்  வருவான் என அமச்சனும்

 பொய் உரைக்கிறான்.

சேலை தர வந்தவர்கள் 

இங்கே  துச்சாதனனாய் ஆனார்கள்  

ஏதை தருவதென்றாலும்  

உடல் தானம் கேட்டார்கள்

 

 பாலுக்கழும் குழந்தைக்கு  வழி என்ன சொல்வது

 இராமர்கள் மட்டும்  எப்போதும்  

வில்லோடே அலைவதனால்  

சீதைகள் மட்டும் தீயிலே

வேகவே  சபிக்கப்படுகிறார்கள்

 இவளை சந்தியில் நிறுத்தி  

சவுக்கடி தர  பல பேர்கள் வருகிறார்கள்

 வந்தவர் முதுகிலே  மூட்டை மூட்டையாக

அழுக்குகளை  காவியபடி

மட்டுவில் ஞானக்குமாரன்/www.tamilmirror.lk

(போரால் பாதிக்கப்பட்ட தாயொருத்திக்கு நேர்ந்த கதியறிந்தெழுதிய கவிதை)

muthumai