netசிறுப்பிட்டி இணையதளத்தில் சிலகாலங்களாக ஓரிரு விடயங்கள் சார்ந்து புலம்பெயர்ந்து வாழும் சிறுப்பிட்டி கிராம மக்களிடையே கருத்து முரண்பாடுகள் கடுமையாக நிலவுவதை பதிவுகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

நான் சிறுப்பிட்டியைச் சேர்ந்தவனோ அல்லது சிறுப்பிட்டி இணையதளத்தின் மூலமான ஒன்றியங்களின் நான்கின் ஒன்றின்  அங்கத்தவரோ அல்ல. அதையும்விட சிறுப்பிட்டியின் அயல்கிராமத்தை சேர்ந்தவனோ அல்ல. அல்லது சிறுப்பிட்டியில் மணம் முடித்தவனோ அல்லது சிறுப்பிட்டியில் எனக்கு சொந்தங்களோ கிடையாது.

பிரபாவை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அதையும்விட எனது மச்சானின் மனைவியின் ஒரு உறவினனும் கூட. இருந்தாலும் இங்கே இங்கிலாந்திலுள்ள நாஹீ கூறியது போல எமது குழந்தைகளோ அல்லது பேரப்பிள்ளைகளோ அல்லது எமது அடுத்தடுத்த தலைமுறைகளோ எமது கிராமங்களுக்கு உதவப் போவது இல்லை.

அதனால் தான் நாம் வாழும் காலங்களிலேயே எமது கிராமங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற கருத்தை நானும் வலியுறுத்துகின்றேன். எமது பிரதேசத்தைப் பற்றி அறிந்தவர்கள், அங்கு வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எல்லோருக்கும் தெரியும் அது ஒரு வறண்ட பூமி. எப்போதோ இருந்துவிட்டு போடும் வெள்ளப் பெருக்கை நாம் கருத்தில் கொள்ள முடியாது. சிலகாலங்களில் தண்ணீர் கிணறுகளில் கூட வத்தி நீரின்றி விவசாயமும் மனித வாழ்வும் பாதிக்கப்பட்டிருப்பதையும் பட்டுக்கொண்டிருப்பதையும் நாம் நன்கு அறிவோம்.kinaru

நிலத்தடி நீர் அப்பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் பொதுவானது. யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. எமது தேவைகளுக்கு அதிகமாக பாவித்தாலே மற்றவர்களுக்கு அது பாதிப்பாக அமையலாம். நாம் அந்த நீரை நிலத்தில் ஊற்றினால் பரவாயில்லை. அது மீண்டும் எமக்கு குடி நீராகவோ விவசாய நீராகவோ கிணற்றில் இருந்து கிடைக்கும். ஆனால் எமது தேவைக்கு அதிகமாக கிணற்றில் இருந்து எடுத்து அதை தனிப்பட்ட லாப நோக்கில் வியாபாரமாக்கினால் அந்த நீர் எங்கிருந்து மீள்நிரப்பப்படும்? neer

அதைவிடவும் அந்த வியாபார நோக்கத்தில் உருவாக்கம் பெற்ற தொழிற்சாலைக் கழிவு அதே நிலத்தில் விடப்படுவதால் இன்னும் 10, 20 ஆண்டுகளில் குடிநீர் மாசுபடுவதோடு அந்த கிராமம் ஆண்டாண்டு காலமாக நம்பியிருக்கும் விவசாயம் பாதிக்கப்படும் அபாயமும் காணப்படுகின்றது.MALUPPAL

எனவே இங்கே நாஹீ என்பவர் கூறியிருப்பதைப் போன்று இரு குழுக்களிடையே பொறாமையோ அல்லது வேறு எந்த நோக்கிலோ பிரச்சனை இருப்பதாக எனக்கு தென்படவில்லை. இங்கே  ஒரு சாரார் ஊர் எதிர்கால நன்மை கருதி பொது நோக்கில் சுயலாபம் ஏதுமின்றி போராடுகின்றார்கள். அதை ஏன் மற்றவர்கள் பொதுநோக்கின்றி போட்டி, பொறாமை, சண்டை, கருத்து முரண்பாடு அப்பிடி இப்பிடி என்று விமர்சிக்கின்றார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை.people_meeting

புலம்பெயர்ந்து வந்துவிட்டோம், பிரபாவின் தண்ணீர் தொழிற்சாலையின் கழிவு சுவிசுக்கோ, லண்டனுக்கோ வரப்போவது இல்லையே ஆகவே அங்கே சிறுப்பிட்டியில் என்ன நடந்தால் எமக்கு என்ன? நமது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ பாதிக்கப்படப்போவது இல்லையே என்று பொது நோக்கம் எதுவுமின்றி  நினைப்பவர்களை என்றுமே எதுவும் செய்துவிட முடியாது.

ஊரிலே யாரென்றே முகம் தெரியாதவர்கள் நாங்கள் இங்கே எதோ ஒரு ஒன்றியத்தில் பிரதிநிகளாக இருக்கின்றோம். அதன்மூலம் ஊருக்கு உதவி செய்கின்றோம் என்ற பேரும் புகழும் கிடைக்கின்றது. பொதுப்பிரச்சனை அது இது என்று போய் பேரை ஏன் கெடுத்துக்கொள்வான் என்று நினைத்தால் அவர்களுக்கு  ஒன்றுமே செய்யமுடியாது.

பிரபா நீண்டகாலமாக இன விடுதலை, பொது வேலைத்திட்டம், தமிழ் மக்களின் நலன் என்று செயற்பட்டவர்!! ஏன் இப்படி குறுகிய நோக்கோடு செயற்படுகின்றார் என்று தான் தெரியவில்லை. அது தான் பெரிய மனவருத்தம்.

அங்கே சிறுப்பிட்டியில் தொழிற்சாலைக் கழிவால் சிறு பிள்ளைகள் பருகும் குடிநீரில் நஞ்சைக் கலந்து விட்டு அவர்களின் கல்விக்கு உதவி செய்கின்றோம் என்று வெளியில் கூறினால் எல்லாம் சரியாகிவிடுமா?Siruppiddyneer

நாமெல்லோரும் எப்போது சுயநலமின்றி பொது நோக்கோடு சிந்திக்கபோகின்றோமோ தெரியவில்லை? பொதுநல நோக்கோடு செயற்பட்டால் ஏற்படப்போகும் பல அனர்த்தங்களை தடுக்கலாம்.தடுக்காது  போனாலும்  தடுக்க முயன்றோம் என்ற நிம்மதியிலாவது இறுதிக்காலத்தில் வாழ்ந்து விடலாம்

சுவிசில் இருந்து : தியாகராஜா முரளிநடேசன்