இந்து மா கடலிலே இனிய முத்தாய்த் திகழும் இலங்கைத் தீவில் மணிமுடியாய்த் திகழும் யாழ்.குடாநாட்டிலே எல்லையெங்கும் புனிதர்கள் காவல் காக்க அதிகாலைப் பொழுதினிலே காற்றினில் கலக்கும் ஆலய மணிகளின் ஓசையுடன் பொழுது புலர்ந்திடும் காவலூர் உதய திசையில் அமைந்திருக்கும் புதுமைகள் பல புரிந்து வரும் புனித அந்தோனியார் ஆலய 191ஆவது வருடாந்த விழா ஜூன் மாதம் 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் ஆராதனைகள் தினமும் நடைபெற்று இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

தற்போது புனித அந்தோனியார் ஆலயம் இருந்த இடத்திலேயே புனித தோமையார் ஆலயம் இருந்ததாகவும் பின் இந்த ஆலய வளவினுள் விறகுவெட்டி ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட புனித அந்தோனியார் சுரூபம் கொட்டில் கோவிலாக இருந்த புனித தோமையார் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் அதன் பின் புனிதரின் அற்புதங்கள் பெருகவே காலகதியில் இவ்வாலயம் பதுவைப் பதியராம் புனித அந்தோனியார் ஆலயமாக இடம்பிடித்துள்ளது எனவும் வண.பிதா ஞானப்பிரகாசம் அடிகளார் 1932ஆம் ஆண்டு எழுதிய வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார் என அறியக்கிடக்கிறது.

கொட்டில் கோவிலாக இருந்த இவ்வாலயம் எப்போது கற்கோவிலாகக் கட்டி முடிக்கப்பட்டது என்பது சரிவரத் தெரியாதாயினும் பழைய முகப்புச் சுவரில் 1820 என்ற குறிப்பு இருந்தமையினால் அவ்வாண்டிலேயே இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டது எனக் கருத இடமுண்டு.

ஆண்டுதோறும் ஆனி 13ஆம் திகதி புனிதரின் திருவிழாவைக் கொண்டாடுவது வழக்கமாகும். இருப்பினும் டச்சுக்கால வேத கலாபனையின் போது மறைத்து வைக்கப்பட்ட கோடியற்புதராம் புனித அந்தோனியாரின் திருச்சுரூபம் ஆலயத்துக்கண்மையில் இருந்த பாவட்டங்காட்டிலிருந்து விறகு வெட்டி ஒருவனால் கண்டெடுக்கப்பட்ட தினமான ஆனி 12ஆம் திகதி ஆலய மக்கள் ஒன்று சேர்ந்து பெரிய விருந்துபசாரம் ஒன்றை நீண்ட காலமாக நடத்தி வந்துள்ளனர். இதற்குத் தேவையான மரக்கறிகள் சில்லாலை, பண்டத்தரிப்பு ஆகிய இடங்களிலிருந்து வண்டில்களில் ஓர் உபகாரி தனது குடும்பத்தினருடன் கொண்டுவருவதும் வழக்கமாக இருந்துள்ளது.

1990ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் காரணமாக ஆலயப் பங்கு மக்கள் இடம்பெயர்ந்து வேறிடங்களுக்குச் சென்றாலும் அதன் பின் ஏற்பட்ட சமாதானச் சூழ்நிலையைப் பயன்படுத்தி இவ்வாலயத்தை புனரமைப்புச் செய்ய முன்வந்தனர். இதற்கென கொழும்பு வாழ் ஆலயப் பங்கு மக்கள் ஒரு நிர்வாக சபையை ஏற்படுத்தி 2006ஆம் ஆண்டு பழைய ஓடுகளால் அமைந்த கூரைக்குப் பதிலாக அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளைப் போட்டு ஆலயத்தை முற்றிலும் புனரமைப்புச் செய்தனர். தற்போது கிரனைட் கல்லினால் செய்யப்பட்ட பலி பீடம் ஒன்றும் புதிதாக செய்யப்பட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு 12.06.2011 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு செபமாலைப் பிரார்த்தனையின் பின் நற்கருணைப் பவனி இடம்பெற்று நற்கருணை ஆசீரும் வழங்கப்படும். 13.06.2011 திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் திருநாட் கூட்டுத்திருப்பலி அருட்பணி ஜுட் அஞ்சலோ அடிகளார் தலைமையில் இடம்பெற்று திருச்சுரூப பவனியைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை பங்குத் தந்தை அருட்பணி சி.ஜி.ஜெயக்குமார் அவர்களால் புனிதரின் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்படவுள்ளது.(ஏ.எவ்.ராஜகுலேந்திரன்)