Manoramaகடந்த சனிக்கிழமை மறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா (78) ஆயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தமைக்காக கின்னஸ் சாதனைப் படைத்தமை பலரும் அறிந்த விடயம். மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.

ஆனால், முதன்முதலில் திரைப்பட நடிகையாக அவர் கெமரா முன் தோன்றியது ஒரு சிங்கள திரைப்படத்திற்காக என்பது பலர் அறியாத செய்தி.
நாடகங்களில் பாடல், நடனத்திலும் திறமையை வெளிப்படுத்தியிருந்த மனோரமாவை அவரின் நடன இயக்குநரான சூரியகலா தான் மேற்படி சிங்கள திரைப்பட இயக்குநர் மஸ்தானிடம் அறிமுகப்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. (அப்படம் குறித்த விபரங்களை உடனடியாக அறியமுடியவில்லை)

பின்னர் கவிஞர் கண்ணதாசன் தயாரித்து 1957ஆம் ஆண்டு வெளியான மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகி பெரும் புகழ்பெற்றார்.

ஆண்களே ஆதிக்கம் செலுத்திய நகைச்சுவை நடிப்புத்துறையில் மனோரமா தனி முத்திரை பதித்தார். தனது நகைச்சுவையினால் ரசிகர்களை சிரிக்க வைத்த மனோரமாவின் சொந்த வாழ்க்கை மிக சோகமானதாகும்.
1937 ஆம் ஆண்டு பிறந்தவர் கோபி சாந்தா என்ற இயற்பெயர் கொண்ட மனோரமா. வறுமையின் கோரப் பிடியில் வாடிய நாட்களிலேயே அவர் தேர்ந்தெடுத்தது நாடக மேடை. வேடிக்கை பார்ப்பவர்களும் நாடகத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் தன்மை வீதி நாடகங்களில் உண்டு. அப்படி வந்தவர்தான் கோபி சாந்தா என்ற இயற்பெயர் கொண்ட மனோரமா.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், திருவாரூர் அருகில் உள்ள மன்னார்குடியில் 1937ஆம் ஆண்டு பிறந்தார். வறுமையின் பிடியில் தவித்த மனோரமாவின் குடும்பம் தொழில் நிமித்தமாக காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூருக்கு இடம் பெயர்ந்தது.

பாடும் திறமை பெற்றிருந்த மனோரமா „மீரா‘ படத்தில் இடம் பெற்ற „காற்றினிலே வரும் கீதம்…‘ பாடலை அதன் மெட்டு நழுவாமல் பாடி பள்ளியில் பிரபலமடைந்தார்.Manorama

அந்தக் காலகட்டத்தில் காரைக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் திறந்தவெளி நாடகங்கள் பிரபலம். பொதுவாக, நாடகம் நடத்தப்படும் இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்து கடை வீதி, திருவிழா மைதானங்கள் என எங்கெங்கு காணினும் நாடகங்கள் அரங்கேறிய காலம் அது.

பெரிதாக ஒப்பனைகள் எதுவும் இன்றி, கதை மாந்தர்களே நடிப்பிடத்தை உருவாக்குவது, உருவங்களை உருவாக்குவது போன்ற தன்மைகள் இந்த நாடகங்களின் சிறப்பு. ஒளியமைப்பு, அரங்கம் என்று எந்தத் தேவையும் இல்லாமல், ஒரு நாடகம் உருவாவதற்கான பொருள் செலவு குறைந்தது. எல்லாவற்றையும்விட, இவை மக்கள் பிரச்சினைகளைப் பேசின. சமூக சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. இதனால், வீதி நாடகக் குழுக்கள் பெருகி வளர்ந்தன.

வேடிக்கை பார்க்கச் சென்றவருக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது
இந்தக் காலகட்டத்தில்தான் காரைக்குடி கடை வீதியில் நடந்த „அந்தமான் கைதி‘ நாடகத்தை வேடிக்கை பார்க்கச் சென்றார் மனோரமா. அப்போது அந்த நாடகத்துக்கு பின்னணி இசை அமைக்கும் குழுவினருடன் இணைந்து மனோரமாவுக்குப் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது மனோரமாவின் திறமையைக் கண்டு வியந்த நாடகக் குழு சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்த பல நாடகங்களுக்குப் பின்னணி பாட அழைத்துச் சென்றது. இதைத் தொடர்ந்து, மேடைகளிலும் ஏற ஆரம்பித்தார் மனோரமா. இந்தச் சமயத்தில்தான் கோபி சாந்தா என்ற பெயர் மனோரமா என்று மாற்றப்பட்டது.

அப்போது வட இந்திய நாடகங்களில் சுரையா என்ற பாடகி மிகவும் பிரபலமாக இருந்தார். மனோரமாவின் பாடல்கள் சுரையாவின் குரல் தொனியில் இருந்ததால், அவரின் பாடல்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.
நாடகச் சுவரொட்டிகளில் „தென்னகத்து சுரையா மனோரமா‘ பாடி நடிக்கும் என்று விளம்பரம் செய்யப்படும் அளவுக்கு உயர்ந்தார் மனோரமா.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகக் குழுவில் நடித்து வந்த எம்.என்.ராஜம் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதால், அந்த இடத்துக்காக சென்னைக்கு வந்தார் மனோரமா. „மணிமகுடம்’தான் முதல் நாடகம். அந்த நாடகத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. எஸ்.எஸ்.ஆரின் நாடகக் குழுவில் தொடர்ந்து பயணித்த மனோரமா, எஸ்.எஸ்.ஆர். ஜோடியாக 500-க்கும் அதிகமான நாடகங்களில் நடித்துப் பிரபலமானார்.

திராவிட இயக்கங்கள் வளர்ச்சி பெற்று வளர்ந்த காலகட்டத்தில் கருணாநிதி கதாநாயகனாக நடித்த „உதயசூரியன்‘, அறிஞர் அண்ணா நடித்த „சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்‘ உள்ளிட்ட சீர்திருத்த நாடகங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பார்வைக்குத் தெரிய வந்தார்.

நாடகங்களில் நடித்து வந்த மனோரமா, முதன்முறையாக சிங்களப் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமானார். 1958-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த „மாலையிட்ட மங்கை‘ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் காலடியெடுத்து வைத்தார். இதையடுத்து, „கொஞ்சும் குமரி‘ படத்தில் கதாநாயகி வேடம் கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் தன் நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மனோரமா, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார்.

50 ஆண்டு காலம் இடைவிடாமல், ஐந்து தலைமுறை நடிகர்களுடன் ஐந்துக்கும் அதிகமான மொழிகளில் 1,500 திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த முதல் ஆசிய நடிகை என்பது மனோரமாவின் மைல் கல் சாதனை. அறிஞர் அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ், ஜெயலலிதா என பின்னாளில் முதலமைச்சரான ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர் அவர்.

1964 ஆம் ஆண்டு தனது நாடக முகாமையாளராக இருந்த எஸ்.எம். ராமநாதனை மனோரமா திருமணம் செய்துகொண்டார். 1965 ஆம் ஆண்டு அவரின் மகன் பூபதி பிறந்தார். மனோரமா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் காலத்திலேயே அவரின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின் அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. 1966 இல் மனோரமாவை ராமநாதன் விவாகரத்து செய்தார். அதன்பின் தனியாகவே தனது மகனை வளர்த்தார் மனோரமா.

புதிய பாதை‘ படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது பெற்ற மனோரமாவுக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவம் செய்தது. ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்தமைக்காக 1985 ஆம் ஆண்டு அவர் கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றார். அதன் பின்னரும் அவர் சுமார் 500 படங்களில் நடித்தமை குறிப்பிடத்தக்கது.