moddaarமோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர், பிரான்பற்று நிக்காமம் விக்னேஸ்வரா பகுதியில் பெண்ணொருவரை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 11 பவுண் தாலியை அறுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுடன் சேர்த்து சிறிய கடை ஒன்றினை குறித்த பெண் நடத்தி வருகின்றார். இக்கடைக்கு மதியம் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளனர். வீதியில் சன நடமாட்டம் குறைந்த நேரத்தினை அவதானித்த அவர்கள் குளிர்பான போத்தலை திரும்ப கொடுப்பது போல் பாசாங்கு செய்து, அவர் அணிந்திருந்த தாலிக்கொடியை பறிக்க முற்பட்டுள்ளனர். உடனே சுதாகரித்து கொண்ட மேற்படி பெண் அவர்களை பிடிக்கவே, அப்பெண்ணை மடக்கி பிடித்த இருவரும் சுவரில் பெண்ணின் தலையை மோதி தாலிக்கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் குறித்த பெண் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இளவாலை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.