மணியந்தோட்டத்தில் வெங்கிணாந்திப் பாம்பினால் கடியுண்டு படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.நேற்றுக் காலை மணியந்தோட்டத்தில் பிடிக்கப்பட்ட 12 அடி நீளமான வெங்கிணாந்திப் பாம்பினால் கடியுண்ட ரவி (வயது 35) என்பவர் பற்கள் தாக்கிய நிலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;
நேற்றைய தினம் காலை 5 மணியளவில் மணியந்தோட்டம் முதலாம் குறுக்கில் வசிக்கும் செ. விஜேந்திரன் என்பவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைக்குள் வெங்கிணாந்திப் பாம்பு சிக்குண்டிருந்தது. அதை மீட்டு சந்திப் பகுதியில் மக்கள் பார்வைக்காக உயிருடன் கட்டி வைத்திருந்தனர்.

அவ்வேளை பாம்புக்கு கற்களாலும் தும்புகளால் மூக்கினுள் நுழைத்தும் குறும்பு செய்ய முற்பட்டபோது அது சீற்றத் துடன் எகிறிப் பாய்ந்து பிரஸ்தாப நபரின் கையின் மேற்பகுதியை கௌவிப் பிடித்துக் குதறியது.வைத்தியசாலையூடாக தகவல் அறிந்த யாழ். பொலிஸார் வெங்களாந்திப் பாம்பை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். கடந்த மாதமும் இந்தப்பகுதியில் 10 அடி நீளமான வெங்களாந்திப் பாம்பு அடித்துக் கொல்லப்பட்டது.மின்சார வசதிகளற்ற இந்தப் பகுதியில் வெங்கிணாந்தி மற்றும் விஷப்பாம்புகளின் நடமாட்டத்தால் மக்கள் இரவில் பயப் பீதியுடன் வாழ வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். நீண்ட காலம் இந்தப் பகுதிகளில் மக்கள் வசிக்காமையால் இந்த வகைப் பாம்புகள் பெருகிக் காணப்படுவதாகக் கூறப்பட்டது.

பாம்புகளின் இனொரு வீடியோ