ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில் சத்ய சாய்பாபாவின் தனி அறை யஜுர் மந்திர் இன்று திறக்கப்பட்டது.
சாய்பாபா முக்தி அடைந்து ஏறக்குறைய 2 மாதங்களுக்குப் பிறகு சில மூத்த நீதித்துறை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் அவரது அறையின் பூட்டைத் திறந்தனர். செய்தியாளர்கள் எவரும் அந்த அறையினுள் அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக யஜுர் மந்திரைத் திறக்க 2 நாட்களுக்கு முன்பு அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தனர். அறக்கட்டளை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று இரவு அறிவித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதியும் இன்று சாய்பாபா அறை திறப்பின் போது உடன் இருந்தார். சாய்பாபாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த சத்யஜித்துக்கு மட்டுமே அந்த அறைக்கதவின் பயோமெட்ரிக் திறப்பு முறை குறித்து தெரியும் என்று கூறப்படுகிறது. அவருடன் அறக்கட்டளை உறுப்பினர்களும், அதிகாரிகளும் சென்றனர். அந்த அறையினுள் என்ன இருந்தது என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

சாய்பாபா உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் மார்ச் 28 ம் திகதி அனுமதிக்கப்பட்டதில் இருந்து யஜுர் மந்திர் மூடப்பட்டது. சாய்பாபா ஏப்ரல் 24 ம் திகதி உயிரிழந்தார். அவரது தனி அறையில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த ஏராளமான தங்க நகைகளும், பணமும் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் யூகங்கள் எழுந்தன.

முன்னதாக சாய்பாபா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது விலைமதிப்புமிக்க பொருட்கள் பிரசாந்தி நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாக பக்தர்கள் சிலர் குற்றம்சாட்டினர். எனினும் சாய்பாபா அறக்கட்டளை அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.