The old metal tap in my home

மட்டக்களப்பு உன்னிச்சைக் குளப்பிரதேசத்தை அண்டியுள்ள மக்களுக்கு ஒரு வருட காலப்பகுதிக்குள் குழாய் நீரை பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான என். ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,
உன்னிச்சை நீர் விநியோகக் குளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் குடிநீரை கிட்டத்தட்ட 50 கிலோ மீற்றருக்கும் அப்பால் உள்ள மட்டக்களப்பு நகர்ப்புற மக்கள் பெற்று நன்மையடைகின்ற அதேவேளை, உன்னிச்சைக் குளத்தை அண்டியுள்ள உன்னிச்சை, நெடியமடு, ஆயித்தியமலை போன்ற பிரதேச மக்களுக்கு இந்த குழாய் நீர் விநியோகம் இதுவரையில் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் குடிநீர் பிரச்சனைக்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு இப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவந்ததையடுத்து குழாய் நீர் விநியோகம் கிடைக்காத கிராமங்களுக்கும் அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’ என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.