sivappi kalimuthuடுபாய் நாட்டிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற நுவரெலியா – நோர்வூட் டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள முகவர் நிலையத்தின் ஊடாக டுபாய்க்கு பணிபெண்ணாக சென்றுள்ளதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
இரண்டு பிள்ளைகளின் தாயான 34 வயதுடைய காளிமுத்து சிகப்பி என்ற பெண் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்  கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை 10 ஆயிரத்து 500 ரூபாவை மாத்திரம் அவரது தந்தையின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் கடந்த இரண்டு வருடகாலமாக குறித்த பெண் தனது உறவினர்களோடும் கணவரோடும் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 04 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக காளிமுத்த சிகப்பி என்ற பெண் டுபாய் நாட்டில் மரணமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் தனது மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.