இதய நோய்க்கு சிகிச்சை பெற சென்னை வந்த ருமேனியா நாட்டை சேர்ந்த இளம்பெண், விமானத்திலேயே இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ருமேனியா நாட்டை சேர்ந்தவர் சலீம். அந்த நாட்டில் பிரபல தொழில் அதிபர். இவரது மகள் ஸ்ரீகாகமிஷ் (20), இதய நோயால் பாதிக்கப்பட்டார். ருமேனியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் சென்னையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

இதற்காக மஸ்கட்டில் இருந்து ஓமன் விமானத்தில் சென்னை புறப்பட்டனர். வெள்ளிக்கிழமை காலை சென்னையை நெருங்கும் நேரத்தில் ஸ்ரீகாகமிஷ் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்கு பைலட் தகவல் கொடுத்தார்.

விமானம் இறங்கும் இடம் அருகே மருத்துவக் குழுவினர் தயாராக காத்திருந்தனர். விமானம் இறங்கியதும் ஸ்ரீகாகமிஷை ஆம்புலன்சில் ஏற்றி பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். பரிசோதனைக்கு பின்னர் ஸ்ரீகாகமிஷ் உடல், விமானம் மூலம் ருமேனியாவுக்கு கொண்டு செல்லப்படும் என பெற்றோர் தெரிவித்தனர்.