swissசுவிட்சர்லாந்து நாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவருடன் தகராறில் ஈடுப்பட்ட ஊழியர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த 22 வயதான நபர் ஒருவர் சுவிஸின் பேர்ன் நகரில் வசித்து வந்துள்ளார். இவர் Biel நகரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் நபர் வேலை செய்த வீட்டில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பொலிசார் வீட்டிற்கு வந்து சோதனை செய்தபோது இருவர் குண்டு காயங்களுடன் கிடந்துள்ளனர். உடனடியாக ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 22 வயதான நபர் இன்று உயிரிழந்துள்ளார். வீட்டு உரிமையாளரான மற்றவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக பொலிசார் அருகில் குடியிருந்தவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, ‘துப்பாக்கி சூடு நடந்த வீட்டில் பலியான நபர் வேலை பார்த்து வந்துள்ளார். வீட்டில் 3 மற்றும் 10 வயதுள்ள குழந்தைகளை அவர் தான் பராமரித்து வந்ததாக தெரிகிறது. ஆனால், சில காரணங்களால் உரிமையாளருக்கும் ஊழியருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும், நபர் ஒருவர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ள சம்பத்தில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாததால் வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.