தனது வீட்டை ஈடு வைத்த பெண்ணொருவர் உரிய காலம் முடிவடைந்தும் பணத்தை முழுவதுமாகச் செலுத்தி முடிக்காத காரணத்தால், நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இச்சம்பவம் காரைநகர் வெடியரசன் பகுதியை சேர்ந்த வயோதிபப் பெண்மணிக்கே இந்த நிலைக்கு ஆளானார்.
மேற்படி பெண்மணியும் அவரது 30 வயதைத் தாண்டிய மகன் ஒருவரும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். மகன் விவாகரத்துப் பெற்ற நிலையில், மனைவிக்கும் ஒரு பிள்ளைக்குமாக மாதாந்தம் படி செலுத்தி வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பணத் தேவையின் பொருட்டு தமது வீட்டை சில வருடங்களுக்கு முன்னர் அதே இடத்தைச் சேர்ந்த, ஒரு குடும்பத்தினரிடம் சுமார் மூன்று இலட்சம் ரூபாவுக்கு தான் ஈடு வைத்தார் எனவும் அதற்கு வட்டி மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவையும் தாண்டிவிட்டது எனவும் அந்தப் பெண்மணி தெரிவித்தார்.
இரு வருடத்திற்குள் வீட்டையும் காணியையும் மீளப் பெறாவிட்டால் அது ஈடு வைத்தவர்களுக்கே சொந்தமாகும் என அறுதியாக எழுதப்பட்ட பத்திரம் மூலமே ஈடு வைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஈடு பிடித்தவர்கள் இரு வருடங்கள் முடிவடைந்த பின்னர் குறித்த பெண்மணியை அந்த வீட்டையும் காணியையும் விட்டு வெளியேறுமாறும் இல்லாவிடின் வட்டியுடன் பணத்தை முழுமையாகச் செலுத்துமாறும் வற்புறுத்தினர்.
அது அவரால் முடியாமல் போகவே அவர்கள் நீதிமன்ற உதவியை நாடினர் எனக் கூறப்படுகின்றது. ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு நடைபெற்றது. இரு தரப்பினரும் சட்டத்தரணியின் உதவியுடன் வழக்காடினர்.
அதன்போது, வீட்டில் இருந்தவாறே ஈட்டுப் பணத்தொகையை பகுதி பகுதியாகச் செலுத்தி முடிக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டது என அப்பெண்மணி தெரிவித்தார்.
மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் தான் அப்பணத்தைச் செலுத்தினார் என அவர் தெரிவித்தார். எனினும், மாதாந்தம் சீராக தன்னால் பணத்தைச் செலுத்த முடியவில்லை எனக் கூறிய அவர் கடந்த தவணையின்போது தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் பணத்தைச் செலுத்தவில்லை என்றார்.
இதனால் வீட்டை விட்டு தான் வெளியேற்றப்பட்டார் எனவும் அவர் கண்ணீருடன் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் முரசறைவோர் சகிதம் தனது வீட்டுக்கு வந்தனர் எனவும் அவர்களோடு ஈடு பிடித்தவரும் வந்தார் எனக் கூறிய முதிய பெண்மணி, அவர்கள் தனது வீட்டில் இருந்த அத்தனை பொருட்களையும் வீட்டுக்கு வெளியே தூக்கிவைத்துவிட்டு தன்னையும் வெளியேற்றினர் எனவும் கூறினார்.
அடுப்பில் சோறு அவிந்து கொண்டிருந்தபோது, இடைநடுவில் பானையுடன் சேர்த்து இறக்கப்பட்டு வீட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது என அவர் கவலைப்பட்டுக் கண்ணீருடன் கூறினார்.
பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு, தன்னையும் வெளியேற்றிய அவர்கள், குறித்த வீடு இனி புதிய உடமையாளருக்கே சொந்தமாகும் என முரசறைந்த பின்னர் திறப்பை ஈடு பிடித்தவரிடம் கொடுத்துச் சென்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் இழந்த தனது வீட்டுக்கு அருகாமையில் கட்டில் ஒன்றில் அமர்ந்திருக்கும் அவர் நேற்றிரவு வீட்டுக்கு முன்னாள் உள்ள சிறிய வைரவர் ஆலயத்தில் படுத்துறங்கினார் எனவும் கூறினார்.
இதேவேளை, தமது ஊர் வரலாற்றில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீடு கைமாற்றப்பட்ட சம்பவம் இதுவே முதற்தடவை என அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
ஈடு பிடித்தவர்கள் இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புடனும் மனிதாபிமானத்துடனும் செயற்பட்டு, நீதிமன்றுக்குச் செல்லாமல் வேறு வழியில் இதை அணுகித் தீர்த்துக் கொண்டிருக்கலாம் எனவும் பிரதேச மக்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.