மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்கு இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் ஆனந்தா வீதியில் இன்று (02) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

கொள்ளையர்களின் தாக்குதலில் தலையில் காயமடைந்த குருநாதர் இரட்ணம் (வயது 69) என்ற வயோதிப மாது யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தடயவியல் பொலிஸாருடன் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.

விசாரணைகளின் பின்னரே கொள்ளையிடப்பட்ட பொருள்கள் தொடர்பில் சரியான தகவலை வழங்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.