அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விண்டெல் என்பவர் ஜொர்ஜியா பகுதியில் வசித்து வருகிறார். தோல் மருத்துவரான இவர் நோயாளிகளுக்கு அழகுக்காக செய்யப்படும் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யும் காணொளிகளை வெளியிட்டுள்ளார்.அதில் கொடுமை என்னவென்றால் நோயாளிகளுக்கு மயக்க நிலையில் இருக்கும்போது அறுவை சிகிச்சைக்கு நடுவே நடனம் ஆடிக் கொண்டும் ஹிப் ஹாப் பாட்டு பாடிக் கொண்டும் அவர் காணொளிகளை பதிவு செய்துள்ளார். அதோடு அவற்றை சமூக வலைத்தளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு காணொளியில் தானே பாடல் வரிகளை உருவாக்கி ‘நான் இங்கு வெட்டப்போகிறேன்’ என பாடிக்கொண்டே மயக்க நிலையில் இருக்கும் நோயாளியின் கிழிக்கப்பட்ட வயிற்றுப் பகுதியை காண்பிக்கிறார்.இந்நிலையில், காணொளியை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் கையில் கத்தியுடன் நடனமாடும் இவரது காணொளிகளை பகிர்ந்தனர்.

முன்னதாக 2016ல் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் தொப்பையை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்றவருக்கு இவரது செயல்பாடுகளால் இதய செயல்பாடு நின்றுவிட்டு அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விசாரணையில் அறுவை சிகிச்சை செய்ய உரிமம் இவர் பெறவில்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.