இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணை தேடி வந்த நிலையில், அவரது சடலம் 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த வியாழக்கிழமை தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற வா திபா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த கிராமத்தில் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. வா திபாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரை தேடினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் 23 அடி நீள மலைப்பாம்பு ஒன்று எங்கும் செல்ல முடியாமல் உருண்டு வந்து உள்ளது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மலைப்பாம்பின் வயிற்று பகுதியை வெட்டி பார்த்து உள்ளனர். அப்போது வா திபாவின் சடலம் உள்ளே இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு செய்தனர்.
மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் வா திபாவின் செருப்பு கிடந்து உள்ளது. அவருடைய தலையை முதலில் விழுங்கியுள்ள பாம்பு பின்னர் உடல் பகுதியை உள்ளே இழுத்து உள்ளது. திபாவின் தோட்டம் செங்குத்தான பாறைகள், குகைகள் என கரடு முரடான பகுதியில் உள்ளது. அங்கு பாம்புகள் நடமாட்டம் என்பது சர்வ சாதாரணமானது என உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.