வடகொரியாவில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏமாற்றிய உயர் இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவின் பியோங்யங் தலைநகரில் உள்ள சுனான் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோன் ராணுவ அகாடமி ஏவுகணை ஏவும் சோகே சேட்டிலைட் ஸ்டேசனில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அங்கிருக்கும் உணவு பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் தொடர்பாக சோதனை நடந்துள்ளது.

அப்போது அங்கு அதிக அளவில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் அளவு சரியில்லாமல் இருந்துள்ளது.

இதனால் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஏவுகணை ஏவும் ஸ்டேசனில் அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை உயர் இராணுவ அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் ஹையோன் ஜு-சாங்( வயது 56) அங்கிருக்கும் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இவர் மக்கள் ஆயுதப்படைகளின் சேவைகள் ஆய்வு பிரிவின் இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

அவர் 1 டன் எரிபொருட்கள், 580 கிலோ அரிசி மற்றும் 780 கிலோ சோளத்தை அதிகாரத்தை பயன்படுத்தி கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அவர் கோன் ராணுவ அகாடமி பலரது முன்னிலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த அதிகாரி கொரிய தீப கற்பத்தில் அமைதி நிலவும் என மிகவும் எதிர்பார்த்ததாகவும் அதற்காக உற்சாகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர் சக அதிகாரிகளிடம் ராக்கெட்டுகள் மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்க எங்களை கஷ்டபடுத்தப்படுவது இனி நீண்ட காலம் தேவைபடாது என கூறியதாக கூறப்படுகிறது.