• சுவிட்சர்லாந்தில் பள்ளிக்குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு பள்ளிகள் காரணமாக அமைவதில்லை, பெற்றோரே காரணமாக உள்ளனர் என்று சிறுவர் நல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

  உலக சுகாதார மையம் 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் 11 வயதுள்ள குழந்தைகளில் 27 சதவிகிதம்பேர் தூக்கமின்மை பிரச்சினைகளால் அவதியுறுவதாகவும், 15 சதவிகிதம்பேர் தொடர் மன அழுத்தத்திற்குள்ளாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

  இதுபோக 12 சதவிகிதம்பேர் அடிக்கடி தலைவலியால் பாதிக்கப்படுவதாக சுவிஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

  இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும்போது, 30 ஆண்டுகளாக Basel நகரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்தவரும், Pro Juventute Foundation என்னும் அமைப்பின் தலைவருமான Katja Wiesendanger, இந்த அழுத்தத்திற்கு காரணம் பள்ளிகள் அல்ல பிள்ளைகளின் பெற்றோரே என்று கூறுகிறார்.

  வர வர பள்ளிகள் பிள்ளைகளின் பிரச்சினைகளை உணர்ந்து வருவதாக கூறும் அவர், “ஆரம்பப் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது என்பதை அடிக்கடி கேள்விப்படுகிறேன், ஆனால் இந்தப் பிரச்சினை எங்கிருந்து வருகிறது என்பதை உங்களையே கேட்டுப் பாருங்கள்.

  பெரும்பாலும் பள்ளிகளே இவ்விடயத்திற்காக குற்றம் சாட்டப்படுகின்றன. ஆனால் உண்மையான பிரச்சினை பள்ளிகளா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

  பிள்ளைகளின் இந்தப் பிரச்சினைக்கு பெற்றோர்கள்தான் காரணம் என்னும் அவர், பல பெற்றோர் படிப்புக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுவே பிள்ளைகள் மீதும் திணிக்கப்படுகிறது.

  பிள்ளைகள் சரியாக படிக்காவிட்டால் ஒதுக்கப்படுவார்களோ என்னும் பயம் பெற்றோருக்கு இருக்கிறது. அந்த பயத்தை அவர்கள் பிள்ளைகளுக்கு கடத்துகிறார்கள் என்று கூறுகிறார்.

  அக்டோபர் மாதம் Pro Juventute Foundation என்னும் அமைப்பு பிள்ளைகளின் விருப்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக ஓய்வு நேரம்கொடுக்க வேண்டும்என்பதை வலியுறுத்தும் “அழுத்தத்தைக் குறைப்போம், அதிக முக்கியத்துவம் குழந்தைக்கு கொடுப்போம்” என்னும் பிரச்சாரத்தைத் தொடங்கியது.

  சமீப காலமாக குழந்தைகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை கேட்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.