இங்கிலாந்து அணிக்கெதிரான தனது கடைசி ஒருநாள் போட்டியில் 19 பந்துகளில் அரை சதம் கடந்து அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 28.1 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 113 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஓஷேன் தாமஸ் 21 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். சிறிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்திலே அதிரடி காட்ட ஆரம்பித்தது. சொந்த மண்ணில் தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய கிறிஸ் கெயில் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஒருபுறம் கிறிஸ் கெயில் அதிரடி காட்ட மறுபுறம் விக்கெட் விழுந்துகொண்டே சென்றது.

இறுதியில் 27 பந்துகளில் 77 ரன்களை குவித்த கெயிலின் அதிரடியால் 12.1 பந்துகளில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

போட்டியின் முடிவில் ஆட்ட நாயகனாக ஓஷேன் தாமஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக 424 ரன்கள், 39 சிக்ச்கள், 2 சத்தங்கள் மற்றும் 19-பந்துகளில் ஐம்பது ரன்களை அடித்த கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்பட்டார்.