யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீர்ப் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு ஆறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன என்றும், அவற்றில் வடமராட்சி கிழக்கு நீரேரியில் இருந்து தண்ணீர் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்தில் குடிதண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 6 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. வடமராட்சி கிழக்கு நீரேரியில் குளம் அமைத்து தண்ணீரைத் தேக்கி குடா நாட்டுக்கு வழங்கும் திட்டத்துக்குரிய நிதி அனுமதிகள் பெறப்பட்டு விட்டன. அந்தத் திட்டத்தால் சூழல் பாதிப்பு இருக்கின்றதா என்று ஆராயப்படுகின்றது.
இரண்டாவதாக 1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆறுமுகம் திட்டத்தில் தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து ‘அட்வான்ஸ் ஆறுமுகம்’ திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
பாலியாறு திட்டம் மூன்றாவதாகவும், மேல் பறங்கியாறு கீழ் பறங்கியாறு திட்டம் நான்காவதாகவும் பரீசிலிக்கப்படுகின்றது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் மழை வீழ்ச்சி அதிகம். அங்கிருந்து குழாய் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டு வரமுடியும்.
ஆறாவதாகத்தான் இரணைமடு திட்டம் உள்ளது. அதனைப் பின்னர் பார்ப்போம் என்று வைத்துள்ளோம். அங்குள்ள விவசாயிகள் இந்த விவகாரத்தில் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள். இப்போதைக்கு அங்கிருந்து கடலுக்குச் செல்லும் தண்ணீரை காசு கொடுத்து யாழ்ப்பாணத்துக்கு வாங்க விரும்புகின்றோம். இந்தப் பணத்தை அங்குள்ள விவசாயிகளுக்கு கொடுத்தால், விவசாய ஆராய்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்த முடியும். எனது பதவிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் குடிதண்ணீர்ப் பிரச்சினை யைத் தீர்க்க விரும்புகி ன்றேன் -– என்றார்.