இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 105 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்புவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 25பேர் உயிரிழந்துள்ளதுடன் 75பேர் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, நீர்கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கையின் போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

கொழும்புவில் குறைந்தது 47 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்புவில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்தக்கலாம் என்று அங்கிருக்கும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு குறித்த விசாரணைக்கு அனைத்து பாதுகாப்புப் பிரிவு அமைப்புகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு தொடர்பாக பகிரப்படும் போலிச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாதுகாப்பு குறித்த அவசரக் கூட்டம் கூட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். கொழும்பு கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர, இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

கொழும்பு கொச்சிக்கடை