இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

மேலும், கொழும்புவின் தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து இன்று மாலை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது. இந்நிலையில் கொச்சிகடை பகுதிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வந்திருக்கிறார். “நாட்டின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தருணமிது“ என ரணில் தெரிவித்திருக்கிறார். யாழ்பாணத்தில் உள்ள யாழ் புனித மரியன்னை உள்ளிட்ட தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.