இஸ்லாமிய பெண்கள் அணியக் கூடிய நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைகளை தடை செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை தான் எதிர்ப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே,இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புர்கா போன்ற ஆடைகளை தடை செய்ய ,புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியதையடுத்தே,பிரதமர் அலுவலகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இது போன்ற ஆடைகளை தடை செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்,  அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி,நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைகளை தடை செய்யும் வகையில் நீதியமைச்சர் அதற்கான சட்டமூலத்தை தயாரித்துக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.