உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை அடுத்து, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி பணிப்புரையை விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட போதிலும், தற்போதைய நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப சமூக வலைதள பாவனையின்போது பொறுப்புடன் செயற்படுமாறு பொது மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு Facebook, WhatsApp, Viber, Youtube போன்ற சமூக வலைதளங்களுக்கு தடைவிதிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.