நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற முன்னர், தாம் பயங்கரவாதத்தை ஒழிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக, ஜனாதிபதித்தேர்தல் பிற்போடப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கின்றது.

அந்தத் தேர்தலுக்கு முன்பாகவே நாட்டில் ஸ்திரத்தன்மையை மீளக் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சூளுரைத்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள குழுவின் தீவிர உறுப்பினர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையே தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள. IS பயங்கரவாத அமைப்பே, அதனை மேற்கொண்டுள்ளதாக தாம் நம்புவதாகவும், ரொய்ட்டர்ஸ்ஸுக்கு அளித்த செவ்வியில் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் ஜனாதிபதித் தேர்தலானது, இந்த ஆண்டின் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்,இடம்பெற வாய்ப்புள்ளதாக ரொய்ட்டர்ஸ் கூறுகின்றது.

ஜனாதிபதிக்கு நெருங்கிய தரப்பிலிருந்து கிடைத்த தகவலுக்கு அமைவாகவே, இந்தச் செய்தியை தாம் வெளியிட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.