நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப்பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீள திறக்கப்படவுள்ளன.

தரம் 6 முதல் 13 வரையிலான வகுப்புகள் மாத்திரமே இன்றுதிங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, தரம் ஒன்று முதல் 5வரையிலான வகுப்புகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்தன.

எனினும், கடந்த உயிர்த்த ஞாயிறு தினமான 21 ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து, நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட சூழ்நிலையின் கீழ், இன்றைய தினம் பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.