இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அடுத்து சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்தத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப ஒருவருட கால வங்கிக்கடன் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி,  இரண்டு வருடகால கடனுக்கு 75 சதவீத வட்டிக் குறைப்பை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும்,  இதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை சுற்றுலாத் துறையிலுள்ள விடுதிகளுக்கான வற் வரி 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாகவும், இவ்வாறு ஒரு வருடகாலத்துக்கு 5 சதவீதம் வற் வரியே அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.