ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில், நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளிலுள்ள 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். 

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. 

இதற்கான நிகழ்வு வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, 

எவ்வாறாயினும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையின் கீழ் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 117 கைதிகள் விடுதலை செய்யப்படுவதோடு, பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து, 62 கைதிகள் விடுதலை  செய்யப்படவுள்ளனர். 

அத்துடன், மஹர சிறைச்சாலையிலிருந்து 55 கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 50 கைதிகளும், பல்லன்சேன சிறைச்சாலையிலிருந்து 53 கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.