யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று நேற்றிரவு(17) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது..

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

அதனை அவதானித்த சிங்கள மாணவர் ஒருவர் தடுக்க முற்பட்ட போது அவரது கழுத்தில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விஞ்ஞான பீட இறுதி ஆண்டு பரீட்சைகள் நடைபெறும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.