மணிக்கு 250 கி.மீ வேகத்தில் இந்த ரயில்கள் சென்று வந்தன. இதுவரை எந்த விபத்தையும் சந்திக்காத புல்லட் ரயில்கள் நேற்று இரவு முதல் முறையாக பெரிய விபத்தை சந்தித்தது.

சீனாவின் ஹாங்ஸ்ஷோ மாநிலத்தின் ஜீஜியாசிங் நகரில் இருந்து பியூஜியன் பகுதியில் உள்ள பஸ்ஹோ நகருக்கு நேற்று மாலை ஒரு புல்லட் ரயில் புறப்பட்டது. வென்சோ நகருக்கு வந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதனால் மின்சாதனத்தில் பழுது ஏற்பட்டு ரயில் நின்றது.

சிறிது நேரத்தில் பீஜிங் நகரில் இருந்து பஸ்ஹோ நகருக்கு சென்ற ரயில் அதே வழித்தடத்தில் வேகமாக வந்தது. பழுதாகி நின்றிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் நின்று கொண்டிருந்த ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகளும், மோதிய ரயிலின் முதல் நான்கு பெட்டிகளும் தடம் புரண்டு, பாலத்திலிருந்து கீழே விழுந்து தொங்கியது.

இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண் உட்பட 35 பேர் பலியாயினர். 191 பேர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு குழுவினர் ஆயிரம் பேர் உடனடியாக அனுப்பப்பட்டனர்.
காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உள்ளூர் ரத்த வங்கி விடுத்த வேண்டுகோளை ஏற்று விபத்து நடந்த இடத்துக்கு அருகே வசிக்கும் மக்கள் 500 பேர் ரத்தம் கொடுத்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சீன ரயில்வே அமைச்சர் செங் காங்சூ உத்தரவிட்டுள்ளாளர். மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ளும்படி சீன அதிபர் ஹூ ஜின்டா, பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உத்தரவிட்டனர்.