சூழலியல் நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் கட்டார் நாட்டில் நீரில் வெவ்வேறு உருவங்களையும் வயதினையும் கொண்ட ஒரு திமிங்கில சுறாக் கூட்டத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

நுண்ணிய உயிரினங்களை உணவாகக் கொள்ளும் இந்தத் திமிங்கில சுறாக்கள் தீங்கு விளைவிக்காதவை என்றும் சுழியோடிகளின் உதவியால் இவை கண்டுபிடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றாடல் அமைச்சின் சுற்றாடல் நிபுணரும் கட்டார் நீரில் திமிங்கிலங்கள் பற்றிய ஆய்வை நடத்தி வரும் நிபுணர்கள் குழுவின் மேற்பார்வையாளருமான மொஹமட் அல் ஜய்தா அல் ஷஹீன் எண்ணெய் வயல் பிரதேசத்திலுள்ள நீரில் 100 திமிங்கில சுறாக்களையும் கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.

வெவ்வேறு வயதையும் உருவ அளவுகளையும் கொண்ட இந்தத் திமிங்கில சுறாக்களில் 80 சதவீதமானவை ஆண் சுறாக்களாகும். சுறாக்கள் சுழியோடும் விதத்தைப் பார்த்து அவற்றின் பாலினத்தை கண்டுபிடிக்கலாம் என்றும் இவ்விதம் சுறாக்கள் கூட்டமாக தென்படுவது உலகிலேயே அரிதான விடயம் என்றும் இதிலிருந்து மெக்ஸிகோவுக்கு அடுத்த படியாக சுறாக்களின் எண்ணிக்கையும் அவை கூட்டமாகத் திரிவதும் கட்டாரில்தான் அதிகம் என்று தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

‘என்வயர்ன்மென்ட்’, ‘நாஸெர்’ என்று பெயரிடப்பட்ட இரண்டு சுறாக்களில் நிபுணர்கள் குழு ஒவ்வொரு கண்காணிப்புக் கருவியை பொருத்தியுள்ளார்கள். ஏராளமான சுறா முட்டைகளையும் அவர்கள் கண்டுபிடித்து இந்தச் சுறாக்களின் வகையையும் மரபணுவையும் இனம்காண்பதற்காக சில முட்டைகள் ஆய்வுகூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஆய்வை ஆரம்பித்த குழுவினர் 7 மாதங்களுக்கு தங்கள் பணியைத் தொடரவுள்ளனர்.

உலகிலேயே மிகப் பெரும் மீன் இனமான திமிங்கில சுறா 20 மீற்றர் நீளம் வரை வளரக் கூடியது. அருகி வரும் இனமான சுறாக்களின் சிறகுகளுக்காக அவை வருடம் தோறும் பல லட்சக்கணக்கில் கொல்லப்படுகின்றன என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சினால் நடத்தப்படும் இந்த ஆய்வு திமிங்கில சுறாக்களை பாதுகாப்பதற்கு உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.