போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அராசங்கம் அறிவித்துள்ளது. 
மாணவர் வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்காக போலியான ஆவணங்களை சில இலங்கை மாணவர்கள் சமர்ப்பிப்பதாக பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் போலியான முறையில் மாணவர் வீசாக்களைப் பெற்றுக் கொள்ள முயன்ற 230 இலங்கையர்களின் விண்ணப்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர் வீசா பெற்றுக் கொள்வதில் மோசடிகள் இடம்பெற்று வருவதனால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மோசடிகளில் ஈடுபடுவோர் தொடர்பில் இலங்கைக் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்வதற்கு பிரித்தானிய எல்லை முகவர் நிறுவனம் உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மாணவர் வீசாக்களைப் பெற்றுக் கொள்ளும் பல மாணவர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் தரவாக சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன் பத்து ஆண்டுகளுக்கு பிரித்தானிய வீசா கோரி விண்ணப்பிக்க முடியாத வகையில் தடை விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த மாதம் மாணவர் வீசா கோரி விண்ணப்பித்த இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய நபர்களின் ஆலோசனைக்கு அமைய விண்ணப்பதாரிகள் போலியான ஆவணங்களை சமர்ப்பிக்கக் கூடாது என உயர்ஸ்தானிகராலயம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகவர்களின் ஊடாக அன்றி நேரடியாகவே விண்ணப்பதாரிகள் பிரித்தானியாவிற்கான வீசா பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.