கலாசார ரீதியான நாட்டுப்புற கலை வடிவங்களின் கொண்டாட்டமான யாழ்ப்பாண இசை விழா 2011 நிகழ்வு இன்று காலை 10.05 மணியளவில் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் ஆரம்பமானது.

நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நடைபெறும் இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வில் நோர்வே உயர்ஸ்தானிகர், யாழ். கட்டளைப்படைத் தளபதி மேஜர் மகிந்த அத்துருசிங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியை இன்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவின் மூலமாக அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் நாடு முழுவதிலுமுள்ள கலாசார ரீதியான நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

தூய நாட்டுப்புறக் கலை, மருவிய நாட்டுப்புறக் கலை மற்றும் கலாசார இசை என்பன ஒன்றிணைந்த வகையில் இந்த விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் இலங்கையிலிருந்து 23 உள்நாட்டுக் குழுக்களும், இந்தியா, நேபாளம், பாலஸ்தீனம், தென் ஆபிரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 சர்வதேச நாட்டுப்புறக் குழுக்களும் கலந்து கொள்ளவுள்ளன.

இந்த இசை விழாவில் நிகழ்த்தப்படவுள்ள பப்பிரவாகம் கூத்துக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. பப்பிரவாகம் கூத்து என்பது யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியிலுள்ள தமிழ் மக்களால் ஆடப்படும் கூத்துக்களில் ஒன்றாகும். இந்தக் கூத்தானது கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின்னர் இப்பொழுது நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இந்தக் கூத்தில் கூறப்படும் பப்பிரவாகம் என்னும் கதையானது இதிகாச நூலான மகாபாரதத்துடன் இணைந்த ஒன்றாகும்.